துரோணரை தூக்கிச் சென்ற ஓணான்!

Dronachariyar with Thirutharastran
Dronachariyar with Thirutharastran
Published on

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசிரியராக துரோணாச்சாரியார் இருந்தார். பாண்டவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்க, கௌரவர்களோ மூடர்களாக விளங்கினார்கள். தன்னுடைய மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து வருந்தினான் அரசன் திருதராஷ்டிரன். துரோணாச்சாரியரிடம் வந்த அவன், “குருவே, நீங்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை. பாண்டவர்களுக்கு நன்றாக கல்வி கற்றுத் தருகிறீர்கள். என் மக்களுக்கு சரியாக பாடம் சொல்லித் தருவதில்லை. அதனால்தான் பாண்டவர்கள் அறிவாளிகளாகவும் என் மக்கள் மூடர்களாகவும் விளங்குகின்றனர். உங்களிடம் வஞ்சக எண்ணம் இல்லாவிட்டால் உங்களிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் அறிவில் ஒரே மாதிரி அறிவுள்ளவர்களாக அல்லவா இருக்க வேண்டும்” என்று கோபத்துடன் கேட்டான்.

அதைக் கேட்ட துரோணாச்சாரியார், “அரசே என்னிடம் வஞ்சகம், சூழ்ச்சி எதுவும் கிடையாது. மாணவர்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துதான் பாடம் சொல்லித் தருகிறேன். அவரவர் இயல்புக்கு ஏற்ப பாடம் கற்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றார்.

அவரது கருத்தை திருதராஷ்டிரன் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே துரோணாச்சாரியார் தனது அருகில் இருந்த சீடன் ஒருவனை அழைத்து, “நீ உடனே ஓடிச் சென்று பாண்டவர்களிடம் கௌரவர்களிடமும், ‘நம் ஆசிரியர் துரோணரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது’ என்று சொல். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மட்டும் பார்த்து வந்து என்னிடம் சொல்” என்றார்.

முதலில் கௌரவர்களிடம் சென்ற அவன், “நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் ஒன்று தூக்கிச் சென்று விட்டது” என்றான்.

அதைக் கேட்ட துரியோதனன் கோபத்துடன், “நம் ஆசிரியரை தூக்கிச் சென்ற ஓணான் இனத்தை சும்மா விடக்கூடாது. கண்ணில் படும் ஓணான்களை எல்லாம் கொல்வோம் வாருங்கள்” என்று தனது தம்பியர்களிடம் சொன்னான். “அண்ணா அப்படியே செய்வோம் என்று தம்பியர்களும் புறப்பட்டார்கள். எல்லோரும் சேர்ந்து ஓணான் வேட்டையில் இறங்கினார்கள். இதனால் பல ஓணான்கள் கொல்லப்பட்டன.

அங்கிருந்து புறப்பட்ட சீடன், பாண்டவர்களிடம் வந்து, “நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் ஒன்று தூக்கிச் சென்று விட்டது” என்றான்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான 5G உணவுகள்!
Dronachariyar with Thirutharastran

அதைக் கேட்ட தருமன் சிரித்தான். “நம் ஆசிரியர் எத்தகைய வல்லமை வாய்ந்தவர். அவரை ஓணான் தூக்கிச் செல்ல முடியுமா? எதற்காக இந்த விளையாட்டு?” என்று கேட்டான். தம்பியர்களும் தருமனுடன் சேர்ந்து சிரித்தார்கள்.

அதையடுத்து, துரோணாச்சாரியாரிடம் திரும்பி வந்த சீடன், நடந்ததை அப்படியே சொன்னான். அருகே இருந்த திருதராஷ்டிரனைபார்த்து, “அரசே நீங்களும் நடந்ததைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் மக்களுக்கு பகுத்தறிவு ஆற்றல் இல்லை. இருந்தால் என்னை ஓணான் தூக்கிச் சென்றது என்ற செய்தியை நம்புவார்களா? ஓணான் வேட்டையில் இறங்குவார்களா? பாண்டவர்களுக்கு பகுத்தறிவு ஆற்றல் உள்ளது. எதையும் உடனே புரிந்து கொள்கிறார்கள். சிறந்த அறிவு பெறுகிறார்கள்” என்றார் துரோணாச்சாரியார்.

அதைக்கேட்ட திருதராஷ்டிரன், துரோணர் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்தான். மூடர்களாக இருக்கும் தனது மக்களை நினைத்து வருத்தத்துடன் அங்கிருந்து சென்றான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com