நலமுடன் வாழ ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையினையும், உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும். சில நேரங்களில் உணவின் சுவைக்காக சேர்க்கும் பொருட்களின் மருத்துவப் பயன்கள் தெரியாமலே அவற்றை ஒதுக்கி விடுகிறோம். அந்த வகையில் சமைக்கும்போது உணவில் சேர்க்கப்படும் சில பொருட்களில்பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
5G உணவுகள்: இஞ்சி, பூண்டு, நெல்லிக்காய், கிரீன் டீ, பச்சை மிளகாய் இவை அனைத்தும் எளிதாக உணவில் சேர்க்கும் பொருட்கள் மற்றும் அனைத்தும் ஜி என்ற எழுத்தில் துவங்குவதால் 5ஜி என்ற பெயரைப் பெற்றுள்ளன.
இஞ்சி (Ginger): இஞ்சி உணவின் ருசிக்காகவே இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் நறுமணம் மற்றும் பலசரக்குப் பொருள் என அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களின் வயதாகும் செயலினை குறைத்து இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. சட்னி மற்றும் தேநீரில் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு (Garlic): மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுரையீரலின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. சூப், குழம்பு, சட்னி என அனைத்து வகையான சமையலிலும் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய் (Gooseberry): நெல்லிக்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவி, உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதை பழச்சாறாகவோ ஊறுகாய் செய்தோ சாப்பிடலாம்.
கிரீன் டீ (Green tea): இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் கிரீன் டீ, கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பான எச்டிஎல்லை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைத்து சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வலுவூட்டி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினம் ஒரு வேளை கிரீன் டீ அருந்துவது உடலுக்கு நல்லது என கூறப்படுகிறது.
பச்சை மிளகாய் (Green chilly): பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் உள்ளதால், சீரான இதயத் துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக இருந்து நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சிறந்த வலி நிவாரணியாகவும், மசாலா சேர்க்கப்படும் அனைத்து வகையான உணவிலும் இதனை சேர்த்துக் கொள்வதால் அனைவருக்கும் இது எளிதில் சென்றடைகிறது.
இனிமேல், 5ஜி உணவுகளில் இருந்தால் அதை தூக்கிப் போடாமல் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறுங்கள்.