‘துரியோதனனுக்கு தனிக் கோயிலா?’ என்று ஆச்சரியமாக உள்ளதா? கர்ணனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் ஆருயிர் நண்பனாக விளங்கிய துரியோதனன் மிகச் சிறந்த சிவ பக்தன். நட்புக்காக எதையும் செய்யும் பரந்த உள்ளம் கொண்டவன். சிறந்த கொடையாளி என்றே இவனை புராணமும் கூறுகிறது. இவனுடைய கோபமும், வன்மமுமே இவனை அழித்தது எனலாம். அப்படிப்பட்ட துரியோதனனுக்கு இந்தியாவில் ஓரிடத்தில் ஆலயம் உண்டு.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் பொருவழி பெருவிருத்தி மலநாட எனும் இடத்தில் துரியோதனனுக்கு என்று தனி கோயில் உள்ளது. தென்னிந்தியாவில் துரியோதனனுக்கு என்று இருக்கும் ஒரே கோயில் இது மட்டும்தான். இந்தக் கோயில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது.
பாண்டவர்களைத் தேடி துரியோதனன் அலைந்து திரிந்து இந்த ஊருக்கு வந்ததாகவும், அப்போது மிகவும் களைப்பாக இருந்ததால் ஒரு குருக்கள் வீட்டின் கதவைத் தட்டி குடிக்க தண்ணீர் கேட்டு இருக்கிறான். அவனுடைய தாகத்தை தீர்த்ததோடு மட்டுமில்லாமல், நன்கு உபசரித்தும் இருக்கின்றனர். இதனால் மனம் மகிழ்ந்த துரியோதனன் அந்த ஊருக்கு நிறைய நல்ல காரியங்கள் செய்து இருக்கிறான். அதுமட்டுமின்றி, தற்போது கோயில் இருக்கும் அந்த குன்றின் மீது அமர்ந்து அந்த ஊரின் நலனுக்காக தவமும் புரிந்துள்ளான். துரியோதனனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கு ஒரு கோயில் கட்டி இன்றளவும் அவனுக்குரிய மரியாதையை இந்த ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
இந்தக் கோயிலின் முகப்பு பகுதியில் கேரள பாணியில் அழகிய கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோயிலுக்குள் கருவறை பகுதியின் நடுவில் சிலை அமைப்பதற்காக உயரமான மேடை மட்டும் உள்ளது. மேற்கூரை எதுவும் இல்லை. கோயில் விழா நடைபெறும் நாட்களில் இப்பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 'மலக்குடா மகோத்ஸவம்' நடைபெறுகிறது.
இதேபோல், வட இந்தியாவில் உள்ள உத்தர் காசி என்னும் இடத்திலும் துரியோதனனுக்கு ஒரு கோயில் உள்ளது. ‘துரியோதனன் மந்திர்’ என அழைக்கப்படும் அந்தக் கோயிலில் துரியோதனனுக்கு பூஜைகள் எதுவும் கிடையாது. மாறாக, அங்குள்ள சிவனுக்கே பூஜைகள் நடைபெறுகின்றன.