ஈசனுக்கு மிக உகந்தது அடியவரின் மனக்கோயிலா? மன்னரின் மகாகோயிலா?

Poosalar Nayanar Kattiya Mana Koyil
Poosalar Nayanar Kattiya Mana Koyil
Published on

சென்னைக்கு அருகில் அமைந்த ஓர் திருத்தலம் திருநின்றவூர். அவ்வூரில் ஒரு சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் பூசலார் நாயனார் என்பதாகும். அவர் ஒரு பரம ஏழை. ஆனால், எந்நேரமும் ஈசனையே நினைத்து போற்றிப் புகழ்ந்து வாழ்ந்து வந்த ஒரு சிறந்த சிவனடியவர். ஒரு நாள் சிவபெருமானுக்கு ஒரு கோயிலைக் கட்ட அவர் மனம் விரும்பியது. ஆனால், அவரிடத்தில் பொருள் இல்லை. ஆனாலும், கோயிலைக் கட்டியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மனதிற்குள்ளேயே சிவபெருமானுக்கு கற்பனையாக ஒரு கோயிலைக் கட்டத் தொடங்கினார்.

நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக ஒரு நிஜ கோயில் எப்படி கட்டப்படுமோ, அப்படியே மனதிற்குள்ளேயே கற்பனையாக ஒரு கோயிலைக் கட்டி முடித்தார் பூசலார் நாயனார். தான் கட்டி முடித்த கற்பனைக் கோயிலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நல்லதொரு நாளைக் குறித்தார்.

இதே நேரத்தில் காஞ்சியை ஆண்ட மன்னர் ஒருவர் சிவபெருமானுக்கு காஞ்சி மாநகரில் பிரம்மாண்டமாக ஒரு கோயிலை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். அந்தக் கோயிலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய எண்ணி சிறப்பான ஒரு நாளைத் தேர்வு செய்தார். பூசலார் நாயனாரும் மன்னரும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தேர்ந்தெடுத்த நாள் விதிவசமாக ஒரே நாளாக அமைந்தது.

சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய குறித்த நாளுக்கு முந்தைய நாளன்று இரவு மன்னரின் கனவில் சிவபெருமான் தோன்றி, “மன்னனே, திருநின்றவூர் எனும் ஊரில் எனது மனதிற்கு மிகவும் விருப்பமான பூசலார் எனும் அடியவர் ஒருவர் எமக்கு ஒரு கோயிலைச் சிறப்பாக நிர்மாணித்துள்ளார். அவ்வடியவர் நாளைய தினம் அவர் எழுப்பிய கோயிலில் எம்மை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்துள்ளார். ஆகையால் நீர் தீர்மானித்திருக்கும் பிரதிஷ்டை நாளை வேறொரு நாளுக்கு மாற்றிக்கொள்” என்று கூறி மறைந்தார்.

மனக்குழப்பத்துடன் அன்றிரவைக் கழித்த மன்னர், மறு நாள் காலை முதல் வேலையாக திருநின்றவூருக்குச் சென்றார். அங்கே பூசலாரைப் பற்றி விசாரித்தார். மேலும், அங்குள்ள மக்களிடம் பூசலார் என்பவர் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் சிவன் கோயில் எங்குள்ளது என்றும் வினவினார். அவ்வூர் மக்கள் ‘தங்கள் ஊரில் புதிதாக எந்த ஒரு சிவன் கோயிலும் கட்டப்படவில்லையே’ என்று உறுதிபடத் தெரிவித்தனர். மன்னர் மேலும் குழப்பமடைந்து பூசலார் எங்கே வசிக்கிறார் என்பதைக் கேட்டறிந்து அவருடைய இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டார். அவரைச் சந்தித்தால்தான் தனது குழப்பம் தீரும் என்று முடிவு செய்து மன்னர் அங்கு சென்று பூசலாரைச் சந்தித்து அவர் கட்டி முடித்த கோயிலை தமக்கு காட்டுமாறு கூறினார்.

இதையும் படியுங்கள்:
இளம் பிள்ளைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள் எவை தெரியுமா?
Poosalar Nayanar Kattiya Mana Koyil

மன்னரின் பேச்சைக் கேட்ட பூசலார் நாயனார் குழப்பமடைந்தார். தான் அப்படி ஒரு கோயிலைக் கட்டவில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு மன்னர் ‘நேற்று இரவு தான் கண்ட கனவில் ஈசன் தோன்றி பூசலார் நாயனார் என்பவர் தமக்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளார் என்றும் இன்று அக்கோயிலில் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய இருப்பதாகவும் கூறினார்’ என்று தெரிவித்தார்.

அக்கணமே பூசலார் நாயனாருக்கு தான் ஈசனுக்கு கட்டிக் கொண்டிருந்த மனக் கோயில் பற்றிய ஞாபகம் வந்தது. உடனே “மன்னரே, இந்த ஏழை ஈசனுக்குக் கோயில் கட்ட விரும்பினேன். ஆனால், அதற்கான பொருள் வசதி என்னிடம் இல்லை. எனவே, மனதிற்குள்ளாகவே ஈசனுக்கு ஒரு கற்பனைக் கோயிலைக் கட்டினேன். கற்பனையில் அக்கோயிலில் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய இன்றைய நாளைத் தேர்வு செய்திருந்தேன்” என்றார்.

பூசலார் இவ்வாறு மன்னரிடம் தெரிவிக்க, மன்னரோ பூசலார் நாயனார் சிவபெருமானிடம் கொண்டிருந்த பக்தியையும், சிவபெருமான் பூசலார் நாயனாரிடம் கொண்டுள்ள அன்பையும் உணர்ந்து வியந்தார். பூசலார் நாயனார் தான் உருவாக்கிய மனக் கோயிலில் ஈசன் எழுந்தருள இருப்பதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

சிவபெருமானின் அருளையும் அன்பையும் பெற்ற பூசலார் நாயனாரை வணங்கி விடை பெற்றார் மன்னர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com