குழந்தைகள் வளரும்போது பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை அவர்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதுதான். அதிலும் முக்கியமாக நாம் கொடுக்கும் உணவுகள் குழந்தைகள் எளிதில் மென்று சாப்பிடக்கூடியதாக இருக்க வேண்டும். சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடும்பொழுது உணவுக்குழாயில் அடைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். எனவே, குழந்தைகளுக்கு எதுபோன்ற உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கடினமான, பிசுப்பிசுப்பான மற்றும் உருண்டையான உணவுகள் குழந்தைகளின் உணவுக்குழாயில் சென்று அடைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, இப்போதுதான் குழந்தை மென்று சாப்பிடக் கற்றுக்கொள்கிறது என்றால் மிருதுவான, மெல்வதற்கு சுலபமான உணவுகளைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
1. கடினமாக இருக்கும் மிட்டாயை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது தொண்டையில் அடைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக மிட்டாய் தரக்கூடாது.
2. Peanut பட்டரை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், பிசுபிசுப்பாகவும், கெட்டியாகவும் இருக்கும் இது, குழந்தைகளின் தொண்டையில் சென்று அடைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
3. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாப்கார்ன் தொண்டையில் அடைத்துக்கொண்டால், உயிர் போகும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
4. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க அவசியம் காய்கறிகளைக் கொடுக்க வேண்டும். எனினும், காய்கறிகளை வேக வைத்து கூழ் போல மாற்றி குழந்தைகளுக்குத் தருவது நல்லது.
5. சீஸ் துண்டுகள் பார்ப்பதற்கு மென்மையாக இருப்பதுபோல தெரிந்தாலும், இது உணவுக்குழாயில் அடைப்பட்டுக்கொண்டு குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம்.
குழந்தைகள் என்ன உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் அடிக்கடி கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். குழந்தைகள் உணவை முழுமையாக மென்று சாப்பிட்டு விட்டார்களா? அல்லது வாயிலேயே அடக்கி வைத்திருக்கிறார்களா? என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். எனவே, குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவை நன்றாக பரிசோதித்துக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.