மகாபாரதத்தில், மாபெரும் கொடையாளியான கர்ணன், கீதாவுபதேசம் செய்த கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்கிறான்:
"உலக நாயகனே! உனக்குத் தெரியாதது ஏதுமில்லை. நான் பிறந்த அந்த நொடியே என் தாய் குந்தி என்னை அனாதையாக்கி, அப்பன் பெயர் தெரியாத பிள்ளையாக்கி, அனைத்து அவலங்களுக்கும் என்னை ஆளாக்கி விட்டார். இது என்னுடைய தவறா கண்ணா? இதன் காரணமாக நான் பட்ட துயரங்கள் சொல்லி மாளக் கூடியதா?
- என்னால் குரு துரோணாச்சாரியாரிடம் வித்தை கற்க இயலவில்லை. 'நான் க்ஷத்ரியன் இல்லை' என்று சொல்லி என்னைத் துரத்தி விட்டார்!
- குரு பரசுராமரோ, மனமுவந்து எல்லா வித்தைகளையும் விரும்பிக் கற்றுக் கொடுத்தார். ஆனாலும் என்ன பயன்? நான் க்ஷத்ரியன் என்று தெரிந்ததும், அனைத்து வித்தைகளும் மறந்து போக வரமளித்து விட்டார்!
- எதிர் பாராமல் என் அம்பு ஒரு பசுவின் மீது பாய்ந்துவிட, அதன் உரிமையாளர் என்மீது கோபங்கொண்டு சாபமளித்து விட்டார். அதில் என் குற்றம் ஏதுமேயில்லையே கண்ணா!
- திரௌபதியின் சுயம்வரத்தில்தான் எனக்கு எத்தனை அவமானங்கள்?
- இறுதியாக, என் தாய் குந்தி என்னை மகனென ஒப்புக்கொண்டது கூட எதற்காக? அவரது மற்ற மகன்களின் உயிரை என் பாணங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ளத்தானே!
- இப்படியெல்லாம் இருண்டு விட்ட என் வாழ்க்கையில், வசந்தத்தைக் கொண்டு வந்தது என் இன்னுயிர் நண்பன் துரியோதனந்தானே. அவனின் தயாள குணமல்லவா எனக்கு வாழ்வளித்தது! அப்படியிருக்கையில், அவன் பக்கம் நான் நிற்பதுதானே நியாயமும், தருமமுமாகும்? அதையெப்படி என்னால் தவிர்த்திட இயலும்?சொல்லுங்கள் மதுசூதனரே! செய்நன்றி மறப்பது, மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றமல்லவா?அதை நான் செய்ய வேண்டுமென்று நீங்களுமா எதிர் பார்த்தீர்கள் மாயக் கண்ணரே?"
பொங்கித் தீர்க்கிறான் கர்ணன்!
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பிறகு வாய் திறக்கிறார் வாசுதேவர்!
"கர்ணா! உன்னுடைய கதையை நீ சொல்லி விட்டாய். என் கதையை நீ அறிவாயா?
- நீயாவது அரண்மனையில் பிறந்தாய். நான் பிறந்ததோ சிறையில்!
- அது மட்டுமல்ல! நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என் மரணம் களைகட்டி நின்றது, என்னை அணைத்துக் கொள்ள!
- நான் பிறந்த அந்த இரவே என் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டேன்.
- நீயோ, சிறுவனாக இருந்தபோது வாள் வீசும் சப்தம், ரதங்களின் ஓசை, குதிரைகளின் காலடி சப்தம் மற்றும் பிளிறல், வில் மற்றும் அம்புகளின் தன்னிகரற்ற ஓசையில் தவழ்ந்து வளர்ந்தாய். என் சிறு பிராயம் எப்படிக் கழிந்தது தெரியுமா?
- மாட்டுக் கொட்டகையில்... மாடுகளின் சிறுநீர் மற்றும் சாண நெடியில். அதோடு நின்றதா? அங்கேயே என்னைக் கொல்ல ஆயிரம் சதிகள். திட்டங்கள்...
- என்னைச் சுற்றிப் படைகளில்லை. நான் படித்திடவும் வாய்ப்பில்லை. இதற்கிடையில், எல்லாப் பிரச்னைகளுக்கும் நானே காரணமென்ற குற்றச்சாட்டு வேறு!
- இளவயதில், உங்களின் வீர தீரங்களைப் பாராட்டி உங்கள் குருமார்களெல்லாம் புகழ்ந்தனர். எனக்கோ, எந்தப் பயிற்சிக்கும் வாய்ப்பில்லை. எனக்குப் பதினாறு வயது நடந்த போதுதான் குரு சந்திரப் பாணியிடம் சேர்ந்தேன்!
- ஜராசந்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, அவர்களை யமுனை நதிக்கரையிலிருந்து கஷ்டப்பட்டு எழுப்பிக் கொண்டு போய் கடற்கரை பக்கமாகக் குடியேற்றினேன். ஆனால் எனக்குக் கிடைத்த பட்டமோ 'பயந்தோடிய கோழை' என்பதுதான்!
- துரியோதனன் போரில் வென்றால், உனக்கு நாடும், நகரமும், நல்வாழ்வும் கிடைக்கும். தருமர் வென்றால், எனக்குக் கிடைக்கப் போவது ஏதுமில்லை!யுத்தத்திற்கு என்னையே காரணமாக்கி, நடப்பவை அனைத்துக்கும் என்னையே குறை கூறி, வேறென்ன நான்கண்ட பலன்?
- ஒன்றை உணர்ந்து கொள் கர்ணா... வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு 'சவால்' இருக்கிறது! நாம் நினைப்பது போல் வாழ்க்கை எளிதானதல்ல!
- துரியோதனின் தவறுகளும், யுதிஷ்டிரரின் நேர்மையும் உன் மனதுக்கே தெரியும்!
- எத்தனை முறை அவமானப் பட்டோம்; எதையெல்லாம் இழந்தோம்; நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய எதெல்லாம் கை நழுவிப் போனது... என்பதையெல்லாம் விட, அந்தந்த நேரங்களில் நம் அணுகு முறை எவ்வாறு இருந்தது என்பதே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்! ஒப்பாரி வைப்பதை நிறுத்து கர்ணா!
- உனக்கு நேர்ந்த தவறுகள், நீ தவறான வழியில் செல்ல உனக்குக் கிடைத்த உரிமம் அல்ல. ஒன்றை மட்டும் உறுதியாக மனதில் இறுத்து கர்ணா! வாழ்க்கை பல சமயங்களில் கடினமானதே! எதன் மீது பயணிக்கிறோம் என்பதல்ல முக்கியம். நாம் ஒவ்வொரு நேர்விலும் என்ன முடிவெடுத்து எப்படி நடந்து கொண்டோம் என்பதே நம் விதியைத் தீர்மானிக்கிறது! உண்மையில் வாழ்க்கை ரொம்பவும் அழகானது!
(கீதையின் சாரம் இதுதான்: நமக்கு இழைக்கப்படும் அநீதிகள், நாம் தவறு செய்வதற்கான லைசன்ஸ் ஆகாது. நம் நியாயமான அணுகுமுறையே நம் விதியை நிர்ணயிக்கும். நல்லதற்கு நல்லது; தீயதுக்குத் தீயது. நல்லதே செய்வோம்!)