நம்முடைய வாழ்க்கையில் தப்பித்தவறி கூட சில பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. அதை மீறி வாங்கிப் பயன்படுத்தினால், நெகட்டிவ் எனர்ஜி, பணக் கஷ்டம், எதிர்மறையான விஷயங்கள் நமக்கு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. கடன் வாங்கிப் பயன்படுத்தக் கூடாத சில வகைப் பொருட்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. துணிகள்: அடுத்தவர்கள் பயன்படுத்திய உடைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அவர்களுக்கு இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட சக்திகள் நமக்கும் வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், அந்த துணிகளில் இருக்கும் இறந்த செல்கள், நுண்ணுயிர்கள் போன்ற விஷயங்களால் நமக்கு ஒவ்வாமை வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
2. நகைகள்: தங்க நகைகள் மகாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. அதைக் கடன் வாங்கி அணியும்போது நிதி தொடர்பான கஷ்டங்கள் ஏற்படும். நகை வாங்கக்கூடிய யோகம் போய்விடும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், பெண்கள் பலரும் தங்களுடைய தங்க நகைகளை அணிந்த பிறகு அதை அப்படியே கழட்டி வைத்து விடுவார்கள். அதைக் கடன் வாங்கி அணியும்போது அதில் இருக்கும் கிருமிகளால் நமக்கு உடல் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
3. வாட்ச்: பெரும்பாலும் வாட்சை ஆண்கள்தான் கடன் வாங்கி பயன்படுத்துவார்கள். அவ்வாறு வாட்சை கடன் வாங்கிப் பயன்படுத்தும்போது பொருளாதார ரீதியான கஷ்டங்கள் ஏற்படும், கெட்ட நேரம் ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது.
4. பேனா: பேனாவை முக்கியமான தருணங்களில் கடன் வாங்கக் கூடாது. டாக்குமெண்ட்டில் கையெழுத்திடப் போகும் தருணங்களில் பேனாவை கடன் வாங்கினால், நம்முடைய வாழ்க்கையை மாற்றப்போகிற தருணம் நமக்கு முன்னேற்றத்தைத் தராது என்று சொல்லப்படுகிறது. நம்முடைய பேனாவை வைத்து கையெழுத்திடும்போது நாம் மென்மேலும் வளர்ச்சி அடையக்கூடிய யோகம் ஏற்படும்.
5. காலணிகள்: சில நேரங்களில் அவசரத்திற்கு மற்றவர்களின் செருப்பை போட்டுக்கொண்டு நாம் வெளியிலே சென்று விடுவோம். அவ்வாறு செய்வது தவறாகும். காலணி என்பது சனீஸ்வரனின் அம்சமாகும். அதை கடன் வாங்கி பயன்படுத்தும்போது சனீஸ்வரரின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். சனி பெயர்ச்சி வரும்போது சனி பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, காலணிகளை கண்டிப்பாக கடன் வாங்கவே கூடாது.