சிக்கனம் - இது வாழ்க்கையில் மிக மிக முக்கியம். அதிலும் குடும்பத்தில் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு, எந்தவிதமான சங்கடங்களும் இல்லாமல் வாழ்வதற்கு முதலில் கைகொடுப்பது சிக்கனம்தான். எது தேவையோ, எது தேவையில்லையோ அதை இனம் கண்டாலே போதும், நாம் வாழ்வில் சிக்கனமாக இருந்து விடலாம்.
‘எப்படித்தான் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஏதோ ஒரு விதத்தில் வீண் செலவாகி விடுகிறது’ என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு என்ன செய்யலாம் என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ரொம்பவும் யோசிக்க வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து குறிப்புகளை படியுங்கள். சிக்கனம் குறித்து உங்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும். சிக்கனமாக, சிறப்பாக வாழ இந்த குறிப்புகளே போதும்.
1. உங்கள் சேமிப்புக் கணக்குத் தனியாக இருக்கட்டும்: நீங்கள் பணம் சேர்க்கவில்லை எனில், சேமிப்பு இருக்காது. உங்கள் சேமிப்பை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துவதைக் கடைப்பிடிக்கவும். முதலில் சேமிக்கும் பழக்கத்தை ஒரு பயிற்சியாகச் செய்யவும். சேமிப்பு கணக்கு மற்றும் செலவு கணக்குத் தனியாக வைத்தால் குழப்பம் ஏற்படாது.
2. எவ்வாறு நீங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும்?: உங்கள் வேலை மற்றும் அதன் மூலம் வரும் சம்பளம் உங்கது செலவினை மேற்கொள்ள போதுமானதாக இருப்பதில்லை. வேலை அல்லது பணியை மாற்றுவது எளிது இல்லையே. உங்கள் வேலையுடன் இணைந்து செய்யும் வாய்ப்புகள் மூலம் சம்பாதித்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம். உதாரணமாக பகுதி நேர ஆசிரியர் வேலை, ஆலோசனை பணிகள் போன்றவற்றின் மூலம் கூடுதல் வருவாய் பெற முடியும்.
3. மனத்தூண்டுதலின் பேரில் வாங்குவதைத் தடுத்திடுங்கள்: இளைஞர்கள் தள்ளுபடிகளால் தூண்டப்படுகிறார்கள். நீங்கள் அவ்வாறு பொருள் வாங்குவது திட்டமிடப்படாத செலவாகும். இப்படி தேவை இல்லாத பொருட்களை மேலும் மேலும் வாங்குவது கடனுக்கு வழி வகுக்கும். என்ன வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்குத் தேவையான நிதிக்கும் திட்டமிட வேண்டும். இது சேமிப்புக்கு வழி வகுத்து பிரகாசமான எதிர்காலத்தை உங்களுக்குக் கொடுக்கும்.
4. விருப்பங்களைப் பூர்த்திச் செய்ய கடன் வாங்குவதைத் தவிருங்கள்: நீங்கள் உங்கள் தேவைகள் அல்லாமல் விருப்பங்களைப் பூர்த்திச் செய்ய வாங்கும் கடனாக இருந்தால் அதைத் தவிர்க்கவும்.
5. சேமிப்பைப் பழக்கம் செய்ய, கீழே உள்ளக் குறிப்புகளை நினைவில் கொள்வது அவசியம்: உங்களுக்கு என்ன தேவை மற்றும் என்ன விருப்பம் எனத் தெரிந்துகொள்ளுங்கள். விருப்பங்கள் செலவில் முடியும். பொருள் வாங்கும்போது விலை பேசி வாங்கவும். மாலில் அதிக விலைக்குக் கிடைக்கும் அதே பொருள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும். அங்கே சென்று வாங்குவதில் தவறேதும் இல்லை. சேமிப்புகளுக்கு இலக்கு வைத்துக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். குறைந்தபட்சம் 10 சதவிகித சேமிப்பு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் இன்னும் சிறப்பு.