
வெள்ளிக்கிழமை உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டிற்கும் புனிதமான நாளாக இருக்கிறது. அதிலும் சனாதன தர்மத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் மங்கலகரமான நாளாகவும், எந்த நற்செயலையும் செய்ய உகந்த நாளாகவும் உள்ளது. வெள்ளிக் கிழமை செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக உள்ளது. அன்றைய நாளில் லட்சுமி தேவியை வழிபாடு செய்வதால் இல்லத்தில் செல்வம் வந்து குவியும்.
மகாலட்சுமியால் ஆசீர்வதிக்கப்பட்ட வீட்டில் செல்வத்திற்கும் செழிப்புக்கும் ஒருபோதும் பஞ்சமிருக்காது. தாயாரின் அருளைப் பெற்றால்தான் ஒருவர் செல்வத்தினை பெற முடியும். லட்சுமியின் மனம் குளிர வழிபாடு செய்தால்தான் அவளும் அருள்பாலிப்பாள்! வெள்ளிக்கிழமைகளில் சில சிறப்பு வழிமுறைகளைக் கொண்டு வழிபாடு செய்வதன் மூலம், அனைத்து பிரச்னைகளும் நீங்கி, வாழ்க்கையில் உள்ள பல தடைகளை உடைத்து செல்வத்தினை பெற முடியும்.
லட்சுமி தேவி எப்போதும் ஒரே இடத்தில் இருக்க விரும்ப மாட்டார். அவரை ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கவைக்க, அவர் மனம் குளிரும்படியான செயல்களைச் செய்ய வேண்டும். லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெறவும், அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் பல நல்ல செயல்களை பின்பற்றுவது மிகவும் அவசியம். லட்சுமி தேவியின் மனம் குளிர வெள்ளிக்கிழமை மாலை அவளுக்கு உகந்த சில பொருட்களை அர்ப்பணிப்பதால் அதிர்ஷ்டம் உங்களை வந்து சேரும். இதனால் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து அவரது செல்வ நிலையை அதிகரிப்பார்.
பால், தயிர், வெண்ணெய் மற்றும் பாலில் செய்த இனிப்புகள் போன்றவை லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமானது. இதையும் லட்சுமி தேவியின் படையலில் சேர்க்கலாம். வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரம், அரிசி மாவில் பூர்ண கொழுக்கட்டை செய்து படையலிட வேண்டும்.
செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் தெய்வமான மகாலட்சுமி தாயாருக்கு இந்த நறுமணம் மிகவும் பிடிக்கும். நறுமணம் மிக்க ஏலக்காய், ஜாதிக்காய், பச்சை கற்பூரம் ஆகியவற்றின் வாசனையால் தேவி ஈர்க்கப்படுவதாக நம்பிக்கை உண்டு. இந்தப் பொருட்கள் இருக்கும் இடத்தில் தாயார் மகாலட்சுமி விரும்பி வாசம் செய்கிறாள். மேலும், பூக்களின் நறுமணம் நிறைந்த வீட்டிலும் லட்சுமி தேவி எப்போதும் வசிப்பாள். நீங்கள் லட்சுமி தேவியை மகிழ்விக்க விரும்பினால், தினமும் பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
மகாலட்சுமி தேவி தண்ணீரில் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் தண்ணீரை வீணடிக்கக் கூடாது. அன்று மட்டுமல்ல, தண்ணீரை எப்போதும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் வீணாகும் இடத்தில் லட்சுமி தேவியும் தங்க மாட்டாள். அங்கு அதிர்ஷ்டமும் உண்டாகாது.
லட்சுமி தேவிக்கு வைக்கும் நிவேதனங்களில் தண்ணீர் கலந்த பானகம் வைப்பது சிறப்பாகும். கடலில் இருந்து தேவி தோன்றியதால் கடல் பொருளான சங்கை அவளுக்கு அர்ப்பணிப்பது நல்லது. மேலும், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவரான மஹாவிஷ்ணு கையில் வைத்திருக்கும் பொருள் சங்கு என்பதால், அவளுக்கு அப்பொருள் மீது கூடுதல் விருப்பம் உண்டு. இந்த எளிய வழிகளைப் பின்பற்றி மகாலட்சுமியின் அருளைப் பெற்று செழிப்போடு இருக்கலாம்.