
பண்டிகை என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டந்தான்! தீபாவளி பண்டிகை ஓரிரண்டு நாட்களுக்கு! பொங்கல் பண்டிகையோ மூன்று, நான்கு நாட்களுக்கு! ஆனால், நவராத்திரி பண்டிகை மட்டுமே ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மெகா பண்டிகை! அந்த விதத்தில் தனிச் சிறப்பு கொண்டது இந்த பண்டிகை! அதோடு மட்டுமல்லாமல், முப்பெரும் தேவியருக்கு, மும்மூன்று நாட்களை ஒதுக்கிப் பெண்மையைப் பேணும் பெருவிழா இது! துர்கை, சரஸ்வதி, லட்சுமி என்று, நம் வாழ்வின் மூலாதாரங்களின் தலைவிகளாக அவர்களைப் படைத்து வணங்கும் பாங்கினை ஏற்படுத்திய நமது முன்னோர்களின் பண்பை என்னென்பது!
‘கல்வியா? செல்வமா? வீரமா?’ என்பது நம் திரைப்படப்பாடல். அறிவு தரும் படிப்பு, அனைத்தும் தரும் செல்வம், பலத்தால் விளையும் வீரம் என்றே இதனை வரிசைப்படுத்தலாம். ஆனால், நவராத்திரியிலோ சக்திக்கும், வீரத்திற்கும் அதிபதியான துர்கா தேவியே முன்னிலைப்படுத்தப்பட்டு முதல் மூன்று நாட்கள் வணங்கப்படுகிறாள். நான்கு, ஐந்து, ஆறாம் நாட்களில் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவி சிறப்பிக்கப்படுகிறாள். ஏழு, எட்டு, ஒன்பதாம் நாட்களில் சரஸ்வதி தேவி போற்றப்படுகிறாள். இந்த விதத்திலும், நடைமுறை வாழ்வுக்கேற்ற ஆர்டர் பின்பற்றப்படுவதால், நவராத்திரி தனித்தே மிளிர்கிறது.
சக்தி நிறைந்த உடல்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை! சுவர் இருந்தால் அல்லவா சித்திரம் தீட்ட முடியும்! உறுதியான உடல்தானே உழைப்பை நல்கிச் செல்வத்தைச் சேர்த்திடும். இந்தக் காலத்தில் நல்ல கல்வியைப் பெற, செல்வமல்லவா தேவைப்படுகிறது. எனவே, சக்தி, செல்வம், கல்வி என்பது நடைமுறை வாழ்வுடன் தொடர்புடைய நல் இலக்கணமாகத்தானே தோன்றுகிறது.
‘ஊரும் உறவும் ஒன்றாய்ச் சேர்ந்தால் நாடும் வீடும் நலம் பெற்று இலங்கும்!’ என்ற உண்மையின் உரைகல் நவராத்திரி பண்டிகை! இந்த நீண்ட பண்டிகையின்போது என்னவெல்லாம் செய்கிறோம்! கொலு வைக்கிறோம்! இதற்காக நம் கற்பனைக்கேற்ற பொம்மைகளை, அலைந்து, திரிந்து வாங்கி வருகிறோம். அதனை அழகுடன் அடுக்கவும் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுகிறோம். புதிய சிந்தனைகள், மனதுக்கு மகிழ்வளிப்பவை; உடலுக்கு வலுவளிப்பவை!
அக்கம் பக்கத்தாரை, உறவினரை கொலு பூஜைக்கு அழைக்கிறோம்! இதனால் உறவுகள் மேம்படுவதுடன், சின்னச் சின்ன வெறுப்புகளும் மறைந்து,சந்தோஷ வாழ்வுக்குத் தயாராகி விடுகிறோம். ஒன்பது நாட்கள் பூஜை! தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜையை வீட்டில் நடத்துகையில், இல்லமே ஆலயமாகி, இறைவனின் இருப்பிடமாகி விடுகிறது.
’கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார்கள் நம் அறிவுசார் முன்னோர்கள். நாம் இல்லத்தையே ஆலயமாக்கி விட்டோமல்லவா? பூஜையில் பாடல்கள், நடனங்கள்! ஆயக் கலைகள் அறுபத்து நான்கில் இசையும், நடனமும் முக்கியமானவை. அவற்றைப் போற்றி வளர்க்கிறோம். வருகின்ற விருந்தினருக்கு ஒவ்வொரு நாளும் வாய்க்கு ருசியாக வகை வகையான சிற்றுண்டிகளைச் செய்து படைக்கிறோம். விருந்தினர்களை முறையாக உபசரிப்பதன் மூலம் நாம், வானத்தவர்க்கு நல் விருந்தினர்கள் ஆகி விடுகிறோம்.
இல்லந்தேடி வருவோருக்கு இனிய பரிசுகள் வழங்குவதன் மூலம் அவர்களையும் திருப்திப்படுத்தி, நாமும் மன நிறைவை அடைகிறோம்! நமது மூதாதையர்கள் வாழ்வை முழுமையாய் உணர்ந்தவர்கள். அதனால்தான் ஒவ்வொன்றுக்குள்ளும், உள்ளார்ந்தவிதமாக பல உன்னதங்களைப் புகுத்தி வைத்துள்ளார்கள். இந்தப் பண்டிகையே, ‘தீமையை அழித்து நன்மை வெற்றி கொள்கிறது’ என்று குறிக்கத்தான்! அசுரன் மகிஷாசுரனை துர்கா தேவி வென்று வாகை சூடியதாக வரலாறு பேசுகிறது. பத்தாம் நாள் வெற்றித் திருவிழா, ‘விஜயதசமி’ என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.