
நவராத்திரியில் வழிபடப்படும் முக்கியமான அம்பிகை வடிவங்களில் மகிஷாசுரமர்த்தினி வடிவமும் ஒன்று. பராசக்தியின் வடிவமான மகிஷாசுரமர்த்தினி மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க முப்பெரும் தேவியர்கள் ஒன்றிணைந்து எடுத்த உக்கிரமான வடிவமாகும். அந்த வகையில் அம்பாள் மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்ததன் காரணம் குறித்து இப்பதிவில் காண்போம்.
முன்பொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் உண்டானபோது அசுரர்கள், தேவர்களின் பதவிகள் அனைத்தையும் பறித்துக்கொண்டு அவர்களை துன்புறுத்தினர். இதனால் பிரம்மனிடம் சென்று தேவர்கள் அனைவரும் முறையிட்டனர். சிவபெருமான் தேவர்களின் துன்பத்தைப் போக்க எண்ணி, பிரம்மனின் ஆலோசனைப்படி ஒரு பெண்ணால்தான் மகிஷனின் அழிவு என்பதை வரம் அளித்த பிரம்மனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
அந்த வரத்திற்கேற்ற வகையில் ஒரு பெண் சக்தியின் அவசியத்தை உணர்ந்த சிவபெருமான், தனது சக்தியை வெளிக்கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். பிரம்மன், விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் போன்ற எண்ணற்ற தேவர்களும் இதேபோன்று தங்களது உடலிலிருந்து ஒரே வடிவில், ஒளி வடிவில் சக்தியினை வெளிக்கொணர்ந்தனர்.
அப்போது பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பிரகாசிப்பது போல ஒரு பெண் வடிவை உருவாக்கினர். தேவர்களும், கடவுளர்களும் கைகூப்பி அந்த சக்தியை வணங்கி நின்றனர். ஒவ்வொரு கடவுளர்களும் அப்பெண் சக்திக்கு தமது ஆயுதங்களை அளித்தனர்.
மகிஷாசுரமர்த்தினி எனப் பெயர் பெற்ற அந்த சக்தி, அனைத்து கடவுளர்களின் ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்டவளாகப் போற்றி வணங்கப்பட்டாள். நான்கு திசைகளை மகிஷாசுரமர்த்தினி திரும்பிப் பார்க்கும்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பிரபஞ்சமே நடுங்கியது. உயர்ந்த வடிவுடையவளாக வானுக்கும் பூமிக்கும் இடையே வீற்றிருந்தாள். இந்தக் காட்சி பிரளயம் உருவானது போல் இருந்தது.
அந்தப் பெண் சக்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் பூமித்தாய் கூட சலித்துக் கொண்டாள். மகிஷாசுரமர்த்தினியின் சிம்மாசனமான சிங்கம் கர்ஜனை செய்ததோடு, மகிஷனை, அசுர படைகளை தேவி லாவகமாக முறியடித்தாள். அசுரன் செய்த பல மாய வேலைகளினால் உடலினை மாற்றி பல்வேறு வடிவில் தேவியை எதிர்த்தாலும் அசுரர்களின் தலைகளை அஞ்சாமல் கொய்தாள். இறுதியில் எருமை கடா உருவெடுத்த மகிஷனை, தமது திரிசூலத்தால் அவனது தலையினை துண்டித்தாள். மகிஷன் வதைக்கப்பட்டான். தேவர்களும் கடவுளர்களும் அதனைக் கண்டு ஆனந்தம் அடைந்து தேவியை வணங்கி ஆனந்தக் கூத்தாடினர்.
மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் இந்த அன்னையின் வடிவத்தைப் போற்றிப் பாடப்பட்டதாகும். இந்த ஸ்தோத்திரம் தீமைகளிலிருந்து விடுபடவும், அன்னையை வழிபடவும் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்களில் ஒன்றாக இருப்பதோடு, இது பயத்தைப் போக்கி தைரியத்தை வழங்கக் கூடியதாகும். நவராத்திரி காலத்தில் தினமும், ‘அயிகிரி நந்தினி’ எனத் துவங்கும் 21 பாடல்களைக் கொண்ட மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகத்தை படித்து வருவதும் காதுகளால் கேட்பதும் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய மந்திரமாக விளங்குகிறது. ஆகவே, இந்த நவராத்திரி காலத்தில் இதுபோன்ற சுலோகங்களை கூறி அம்மனை வழிபட்டு அருள் பெறுவோம்.