

நம் நாடு முழுவதும் எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களின் பிரசாதங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
புட்டு: காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று புட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.
அதிரசம்: காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன் பட்டணத்தில் குடி கொண்டிருக்கிறார் ஆயிரம் காளி அன்னை. 5 ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் அம்மனை பெட்டியில் இருந்து எழுந்தருளச் செய்து ஆயிரம் அதிரசம் படைத்து படையல் வைத்து வணங்கி அருள் பெறுகின்றனர்.
அக்கார அடிசில்: ஆண்டாளுக்கு மார்கழி மாதம் 27ம் நாள் அக்கார அடிசில் நிவேதனம் செய்யப்படுகிறது. இதற்கு பால், நெய் மிக அதிகம் தேவை.
தோசை பிரசாதம்: மதுரை அடுத்த அழகர்கோவிலில் மலை உச்சியில் நூபுர கங்கை பாய்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தோசை பிரசாதம் தயார் செய்யப்பட்டு அழகருக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஒப்பிலியப்பர் உப்பில்லா வடை: கோயில் பிரசாதத்தில் உப்பில்லாமல் தரும் தட்டை, முறுக்கு, வடையை அங்கே சாப்பிட்டால் உப்பு போடாத குறையே தெரியாது. கும்பகோணம் அருகில் இருக்கும் இந்த பெருமாள் கோயில் பிரசாதத்தல் உப்புப் போட மாட்டார்கள்.
அரவணை: சுவாமி ஐயப்பன் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் அரங்கனுக்கும் அவனது அணையான ஆதிசேஷனுக்கும் அமுதுசெய்யப்படும் பிரசாதம் இது.
லாப்சி: சத்யநாராயண சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் பலகாரம் இது. ஜெயின் கோயில்களிலும் வழங்கப்படுகிறது.
காரா பிரசாதம்: பஞ்சாப் பொற்கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் இது.
பால் மாங்கா: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பிரசாதம். தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓட்டில் வைத்து மட்டுமே பத்மநாப சுவாமி கோயிலில் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கிருக்கும் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழைமையானது.
கொஜ்ஜா வலக்கி/ ஹூலியா வலக்கி: இது கர்நாடக கிருஷ்ணர் கோயில் பிரசாதம். இந்த நைவேத்யம் உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு சேர்ந்து வித்தியாசமான சுவையோடு இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல்: பெருமாள் கோயில்களில் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக தரப்படுகிறது.
வெண் பொங்கல்: மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை வேளையில் பெருமாள் கோயில்களில் இதனை பிரசாதமாக கொடுப்பது வழக்கம்.
தயிர் சாதம்: இது தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்குப் படைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மிளகு புளியோதரை: இது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
சுக்கு கசாயம்: கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சுக்கு கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சம்பா சாதம்: தில்லை என்கிற சிதம்பரத்தில் நடனம் புரியும் நடராஜ பெருமானுக்கு சம்பா சாதம், கொத்சு நைவேத்தியம் செய்யப்படுகிறது. சாம்பா சாதத்தை சில ஆஞ்சனேயர் கோயில்களிலும் பிரசாதமாக கொடுப்பதும் உண்டு.
எள்ளு சாதம்: இதை சனிக்கிழமைகளில் சனி பகவானுக்குப் படைத்து பிரசாதமாக தரப்படுகிறது.
கோதுமைப் பொங்கல்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா என்னும் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் பகவான் கண்ணனுக்கு கோதுமை பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
ரசகுல்லா: கொல்கத்தா காளி தேவிக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பாலடை பிரதமன்: இது குருவாயூர் கோயிலில் பிரசித்தி பெற்ற பிரசாதம்.
மோதகம்: பிள்ளையார்பட்டியில் இந்த மோதகம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பின்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.