
ஆறுமுகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணி முருகன் கோவில் ஐந்தாம் படை வீடாக அமைந்துள்ளது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் அரக்கோணத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இது முருகப்பெருமான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட தலமாகும். இது முத்துசாமி தீட்சிதராலும், அருணகிரிநாதராலும் பாடப்பட்ட தலம்.
ஒரு ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோவில். அதனால் இங்கே வருடாவருடம் டிசம்பர் 31 ஆம் தேதி படி உற்சவம் நடைபெறுகிறது. ஒவ்வொரு படிக்கும் சந்தனம், குங்குமம் இட்டு திருப்புகழ் பாடியபடியே அன்பர்கள் படிகளை ஏறி முருகனை தரிசிக்கின்றனர். தல வரலாற்றின்படி தேவர்களுக்கு தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போரிட்டு வெற்றி பெற்று தேவர்களின் துயரத்தைப் போக்கி, வள்ளியை மணந்து முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்து தலம் திருத்தணி ஆகும்.
முருகனின் சினம் இந்த தலத்தில் வந்து தணிந்ததால் தான் இந்த தலம் தணிகை என்னும் பெயர் பெற்றது. பக்தர்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றை தணிக்கும் இடமாக இந்தத் தலம் விளங்குகிறது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இங்கேயுள்ள தீர்த்தம் சரவணப்பொய்கை என்னும் புகழ்பெற்ற தீர்த்தமாகும். இந்த திருக்குளம் மலையடிவாரத்தில் இருக்கிறது.
மற்ற கோவில்களில் உள்ளது போன்ற வேல் திருத்தணியில் முருகன் திருக்கரத்தில் இல்லை. திருத்தணியில் முருகன் வலக்கரத்தில் சக்தி ஹஸ்தம் என்னும் வஜ்ரவேலுடன் இடக்கையை தொடையில் வைத்து ஞன சக்தி பெற்றவறாக காட்சியளிக்கிறார். விசேஷ நாட்களில் அலங்காரத்தின் போது மட்டுமே வேல், சேவல் கொடி போன்றவற்றை வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
இந்திரன் தன் புதல்வி தெய்வானையை முருகனுக்கு மணம் செய்வித்தபோது சீராக தன்னுடைய வெள்ளை யானை ஐராவதத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஐராவதம் தேவலோகத்தை விட்டுச் சென்றதும் அங்கே செல்வசெழிப்பு குறைந்ததைக் கண்டு தேவேந்திரன் கவலையுற்றான்.
இந்திரனின் கவலையையறிந்து முருகபெருமான் ஐராவதத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்தபோது, சீராகக் கொடுத்ததை திரும்பப்பெறும் பழக்கமில்லை என்று தேவேந்திரன் மறுத்து விட்டான். இதனால் ஐராவதம் தேவலோகம் இருக்கும் கிழக்கு திசையைப் பார்த்தபடி இருக்கும்படி முருகப்பெருமான் ஏற்பாடு செய்தார். தேவலோகத்தின் செல்வசெழிப்பும் சீரானது. அதனால் இந்தக் கோவிலில் இருக்கும் ஐராவத யானை சிற்பமும் கிழக்கு முகமாகம் பார்த்தபடி அமைந்துள்ளது.
தேவேந்திரன் ஒரு சந்தனக்கல்லையும் முருகனுக்கு திருமணப்பரிசாக அளித்தானாம். அதில் சந்தனம் அரைத்து முருகனுக்கு விசேஷ தினங்களில் காப்புப் போட்டு, அந்த சந்தனத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கும்போது பக்தர்களின் தீராத வியாதிகள் தீருகின்றனவாம்.
இந்த தலத்தில் விசேஷங்கள், டிசம்பர் 31 ஆம் தேதியன்று நடைபெறும் படித்திருவிழா, ஆடித் தெப்பத் திருவிழா, கந்தசஷ்டி, பங்குனி உத்தரம், தைப்பூசம் முதலியன.
இப்போது இன்றிலிருந்து ஆரம்பித்து (16.08.25) மூன்று நாட்கள் ஆடித் தெப்பத்திருவிழா இங்கே கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது. ஆடி அசைந்து வரும் தெப்பத்தில் ஆறுமுகப்பெருமான் தரிசனம் தந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.