

பூஜையின்போது தீபம் ஏற்றுவது பழங்காலத்திலிருந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. விளக்கு இல்லாமல் பூஜை நடக்காது. பூஜையின்போது சிலர் நெய் தீபம், சிலர் எண்ணெய் விளக்குகளை ஏற்றுவர். அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும். இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கினை குறிப்பதாகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியை பெற வேண்டும் என்பதே விளக்கேற்றுவதின் தத்துவம்.
ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கு உடலாகவும், நெய் உணர்வுகளாகவும், திரிகள் ஆன்மாவாகவும், சுடர் ஆன்ம ஒளியாகவும் இயங்குகின்றன. பூஜை அறை அல்லது கோயிலில் நெய், எண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் பல வகையான எண்ணெய்களைக் கொண்டு தீபம் ஏற்றும் மரபு உள்ளது. ஒவ்வொரு விளக்கையும் ஏற்றுவது தனி சிறப்பாகும்.
இந்து தர்மத்தில் நெய் தீபம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. எண்ணெய் விளக்கை விட, நெய் விளக்கு சிறப்பு. அனைத்து தெய்வங்களுக்கும் நெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஆனால், அம்மனுக்கு எண்ணெய் விளக்கு ஏற்றப்படுகிறது. பைரவரை வழிபட கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பொருளாதார பிரச்னைகள் விலகும். இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. சனி பகவான் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெற கடுகு அல்லது எள் விளக்கெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். கடுகு எண்ணெய் தீபம் ஏற்றினால் கணவரின் நீண்ட ஆயுள் ஆசை நிறைவேறும்.
அனுமனின் அருள் பெற முப்புரி தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு கடுகு எண்ணெய் தீபம் ஏற்றினால் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க உதவுவார். சூரிய பகவானுக்கு கடுக்காய் தீபம் ஏற்றப்படுகிறது. ராகு, கேது கிரகங்களின் பாதிப்பு நீங்க ஆமணக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
பொதுவாக, அனைத்து கோயில்களிலும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். பரிகாரத்திற்காக பசும் நெல், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் வாராஹி தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும்.
விளக்கேற்றும் திசைகள் பலன்கள்: மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் பொருளாதாரம் உயரும். கடன் தொல்லை தீரும். வடக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடைகள் நீங்கும். கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். ஐந்து முக திசை நோக்கி விளக்கேற்றினால் கடன் தொல்லைகள் நீங்கும். இலவம் பஞ்சால் திரிக்கப்பட்ட திரிகள் சகல பாக்கியங்களையும் தரும்.
தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றினால் சர்வ மங்கலம் உண்டாகும். மாலை 6 மணி அளவில் வீட்டில் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட குடும்ப சுகம், புத்திர சுகம், நல்ல பலன் கிடைக்கும். விளக்கேற்றும்போது விளக்கிற்குப் பால், கல்கண்டு நிவேதனம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.