

Sathya Sai Baba quotes:
என்னை வந்தடைபவர்கள் எல்லாம் முன் ஜென்மத்தில் என்னுடன் ஐக்கியப்பட்டவர்கள். அவர்களை நான் காந்த சக்தியைப் போல சாயி பக்தி என்னும் கயிற்றினால் கட்டி என்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். என்னை வந்தடைய, என்னைக் கண்டுபிடிக்க, என் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிட்ட, நீங்கள் முக்தி மார்க்கத்தை அடைய, சாயி சாயி என்று மட்டும் உள்ளன்புடன் ஜெபியுங்கள். சாயி என்னும் ஜபம் உங்களைக் காக்கும். நீங்கள் ஏழு கடலுக்கு அப்பால் செல்ல வேண்டுமானாலும் யானாகிய சாயி அழைத்துச் செல்வேன்.
நான் யார் மூலமாகவும் பேசுவதில்லை. நான் யார் மேலும் ஆவேசமாக வருவதில்லை. நான் யாரையும் என் வார்த்தைகளை வெளிப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவதில்லை. நான் வெளிப்படையாக வருகிறேன். நான் நேராக வருகிறேன். நான் நானாக வருகிறேன்.
நான் உங்களிடமிருந்து நிறம் மாறிப் போகும் மலர்களையோ, அழுகிப் போகும் பழங்களையோ, தேச எல்லை தாண்டினால் விலை போகாத காசுகளையோ வேண்டுவதில்லை. உங்கள் இதயம் என்னும் மானஸ ஸரோவரில் தெளிந்த உள்ளுணர்வு என்கிற குளிர்ச்சியான நீரில் மலரும் தாமரை மலரைத் தாருங்கள். புனிதமான, மாறாத ஒழுக்கம் என்கிற பழங்களைத் தாருங்கள்.
சாயி அனுக்ரகமென்னும் வங்கியில் எவ்வளவு நிதி உள்ளது என்பது கணக்கிட முடியாது. உயர் மதிப்புள்ள வைரம் போன்ற அனுக்ரகத்தை நான் அளிக்க இருக்கும் போது, சின்னஞ்சிறு அருளுக்கு நீங்கள் ஏங்குவது சரியல்ல. நான் அளிக்கவிருக்கும் உயர்ந்த அனுக்ரகத்தை ஏற்கத் தகுதி பெறும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
சாயி பக்தரின் நித்ய க்ருத்யமே ஸத்யான்வேஷனம். சாயி பக்தர்களின் ஸ்வபாவமே ப்ரேமையாக வேண்டும்.
வாழ்நாளின் ஒவ்வொரு நிமிஷமும் பவித்ரமாகச் செய்ய வேண்டும். காலஸ்வரூபனான பகவானை ஆராதிக்கும் நீதியே அது.
சாயி பக்தனை அறிய வேண்டுமானால் அவன் பாட்டையோ, பேச்சையோ மட்டும் கவனித்தால் போதாது. அவன் செயல் தான் சரியான அடையாளம். செயலினால் தான் சாயி பக்தி வெளிப்படும்.
சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே!
பொறுமையாயிரு! ஆனால் சோம்பேறியாயிராதே!
பற்றற்று இரு! ஆனால் காட்டுக்குப் போய் விடாதே!
இல்லறத்தை நடத்து! ஆனால் காம வெறியனாய் இராதே!
வீரனாய் இரு! ஆனால் போக்கிரியாய் இராதே!
அன்பாயிரு! ஆனால் அடிமையாயிராதே!
கொடையாளியாய் இரு! ஆனால் ஓட்டாண்டியாயிராதே!
சிக்கனமாயிரு! ஆனால் கருமியாயிராதே!
இரக்கங்காட்டு! ஆனால் எமாந்து போகாதே!
BEND THE BODY - உடலை வளைத்து வணங்கச் செய்தல்
MEND THE SENSES - புலன்களைக் கட்டுப்படுத்துதல்
END THE MIND - மனதில் எழும் ஆசைகளை அழித்தல்.
இதுவே அமரத்வம் அடைய சரியான வழியாகும்!