
அதிகாலை அல்லது சாயங்காலப் பொழுதில் ஒரு விளக்கை ஏற்றும் போது, மனதுக்குள் ஒரு அமைதி பரவுவது போன்ற உணர்வு ஏற்படும். சிலர் நெய்யில் விளக்கேற்றுவார்கள், சிலர் எண்ணெயில் விளக்கேற்றுவார்கள். அது ஏன் என்று யோசித்ததுண்டா? அதற்குப் பின்னால் ஒரு ஆழமான ஆன்மிகக் காரணம் உள்ளது. நெய், எண்ணெய் இரண்டுக்கும் தனித்துவமான சக்தியும், ஆசீர்வாதங்களும் உண்டு.
தீபம் ஏற்படுவதால் கிடைக்கும் நன்மைகள்:
இருளை விரட்டும் ஒளி:
இருள் என்பது ஒளிக்கு எதிரானது அல்ல; அது ஒளியற்ற நிலை மட்டுமே. ஒரு விளக்கு ஏற்றும் போது, இருள் போராடாமல் விலகிச் செல்வதைப் போலவே, நம் வாழ்வில் உள்ள கவலைகளும், பயங்களும் நம்பிக்கைக்கு முன்னால் காணாமல் போகும்.
காலை தீபம்:
காலைப்பொழுதில் விளக்கேற்றுவது ஒரு நல்ல தொடக்கத்துக்காக, நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் கேட்பதை குறிக்கும்.
மாலை தீபம்:
அதேபோல், மாலையில் விளக்கேற்றுவது இருளின் வருகையை அமைதியாக ஏற்றுக்கொண்டு, இரவு முழுவதும் பாதுகாப்புக் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதை குறிக்கிறது.
நெய் vs எண்ணெய்:
நெய்யும் எண்ணெய்யும் வெறும் எரிபொருட்கள் அல்ல; அவை நம் குணாதிசயங்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் குறிக்கின்றன.
நெய்: இது தூய்மையானது, மென்மையானது. நெய்யால் விளக்கேற்றுவது, உங்கள் மனதின் தூய்மையான, நிபந்தனையற்ற அன்பை கடவுளுக்கு அர்ப்பணிப்பது போல. இதன் சுடர் அமைதியாகவும், பொன்னிறமாகவும், மென்மையாகவும் இருக்கும். தியானம் மற்றும் சிறப்பு பூஜைகளின் போது நெய் விளக்குகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம், அது மனதை அமைதிப்படுத்துவதோடு, ஒரு புனிதமான உணர்வையும் உருவாக்குகிறது. இதன் வாசனை மென்மையான அரவணைப்பைப் போல உணர்த்தும்.
எண்ணெய்: இது கனமானது, அன்றாட வாழ்வின் சுமையை ஒத்தது. எண்ணெயில் விளக்கேற்றுவது, கவலைகளையும், அகங்காரத்தையும், போராட்டங்களையும் எரித்துவிட்டு, மனதை லேசாக்குவது போல. இதன் சுடர் சற்று அசைந்தாலும், அதற்கு ஒரு சக்தி உண்டு. எண்ணெய் கனமானதால், அது நம் வாழ்க்கைச் சுமையைக் குறிக்கிறது. எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், சுடர் எப்படி மேலே எழும்புகிறதோ, அதே போல் நாமும் உயர முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது. கடுகு அல்லது நல்லெண்ணெய் விளக்குகள், எதிர்மறை சக்திகளை வீட்டிலிருந்து விலக்கி, ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதாக நம்பப்படுகிறது.
இவை இரண்டும் ஒன்றையொன்று உயர்ந்தவை அல்ல. நெய் விளக்குகள் புகை இல்லாததால், அமைதியான சூழலை உருவாக்குகின்றன. எண்ணெய் விளக்குகள் சற்று புகையை வெளியிடுகின்றன. இது பூச்சிகளை விரட்டவும், காற்றை சுத்திகரிக்கவும் உதவியாக இருக்கின்றன. எனவே, அவை ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி, நடைமுறை ரீதியாகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
எப்போது, எதை ஏற்ற வேண்டும்?
காலை: நெய் தீபம் ஏற்றி, அன்றைய நாள் முழுவதும் தூய்மையும் ஆசீர்வாதமும் நிறைந்திருக்க வேண்டிக்கொள்ளலாம்.
மாலை: எண்ணெய் தீபம் ஏற்றி, இரவு முழுவதும் பாதுகாப்பாக இருக்கவும், எதிர்மறை சக்திகள் விலகிச் செல்லவும் வேண்டிக்கொள்ளலாம். வாழ்க்கையின் இரண்டு பக்கங்களான தூய்மையும் பாதுகாப்பும் இணைந்து இருக்க இரண்டையும் ஒன்றாக ஏற்றலாம்.
அடுத்த முறை தீபம் ஏற்றும் போது, அது வெறும் பழக்கமாய் இல்லாமல், உங்கள் மனதில் உள்ள நன்றியை, அமைதிக்கான கோரிக்கையை, அல்லது ஒரு சுமையை விடுவிப்பதற்கான பிரார்த்தனையை அந்த சுடரில் சமர்ப்பியுங்கள்.