
‘துர்கமன்’ என்ற அசுரனை அழித்ததால் அம்பாளுக்கு ‘துர்கை’ என்ற பெயர் வந்தது. துர்கை என்றால் துன்பத்தை நீக்குபவள் என்று பொருள். அம்பாள் பல்வேறு கோலங்களில் துர்கையாகக் காட்சி தரும் சில கோயில்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தஞ்சை, பட்டீஸ்வரம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆறடி உயரத்தில் எட்டுக் கரங்களுடன் துர்கா தேவியை தரிசிக்கலாம். ராகு, கேது தோஷம் போக்கும் இந்த துர்கை மகிஷாசுரன் தலை மீது நின்று கொண்டு, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு காட்சி தருகிறாள். அவள் கைகளில் சங்கு, சக்கரம், கத்தி, கிளி, வில், அம்பு போன்றவை உள்ளன. ஒரு கையால் அபாய முத்திரை, மற்றொரு கையில் கேடயம் கொண்டு அம்பிகையின் ஒரு கால் புறப்படுவதற்கு தயாராவது போல் காட்சி தருகிறாள். எப்போதுமே ஒன்பது கஜ புடைவையுடன் அம்மன் காட்சி தருகிறாள்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்திருக்கும் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், பல்லாயிரம் ஆண்டு காலப் பழைமையானது. இங்குள்ள துர்கையம்மன் வலது கட்டை விரல் இல்லாமல் சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறாள். இந்த துர்கை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது மிகவும் உக்கிரமாக இருந்தாராம். எனவே, அவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக விரலை வெட்டியதாக கூறப்படுகிறது. இவளுக்குக் கீழே மேரு மலையும், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரமும் இருக்கிறது. இத்தல அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் உச்சிக்காலத்தில் யானையுடன் மகாலட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்கையாகவும் காட்சி தருகிறாள்.
பொதுவாக, மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில்தான் துர்கையம்மன் காட்சியளிப்பார். ஆனால், திருச்சி அருகில் உள்ள ஈங்கோய்மலை ஈங்கோய்நாதர் கோயிலில் கருவறை கோஷ்டத்தில் இரண்டு துர்கை வடிவங்கள் காணப்படுகின்றன. மகிஷாசுரனை வதம் செய்த துர்கையாகவும், சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும் துர்கையாவும் ஒரே இடத்தில் இரண்டு துர்கைகள் காட்சி தருவதை தரிசிக்கலாம். இத்தல மரகதாம்பிகை சன்னிதி கோஷ்டத்தில் இந்த துர்கையம்மனின் கோலத்தை தரிசிக்கலாம்.
காஞ்சிபுரம், பெரும்பேர் கண்டிகையில் உள்ளது தான்தோன்றிஸ்வரர் ஆலயம். இத்தல ஈசன் மணலால் ஆனவர். இந்த பழைமையான சிவன் கோயிலில் மிகவும் அரிதான சங்கு உள்ளது. அதன் மூலமே சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு துர்கை மான் வாகனத்துடன் காட்சி தருகிறாள். கோயில் வளாகத்தில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பமாக துர்கை காட்சி தருகிறாள். இவளுக்குப் பின்புறத்தில் மான் நின்றிருக்க, துர்கையின் இடுப்பில் இருந்து செல்லும் சூலாயுதம், காலுக்குக் கீழே உள்ள மகிஷாசுரன் தலை மீது குத்தியபடி உள்ளது.
பொதுவாக, துர்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். ஆனால், நாகை மாவட்டம் குத்தாலம் என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள கதிராமங்கலம் வன துர்கை கோயிலில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறாள். வலது கை சாய்ந்த நிலையில் அபய ஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள்பாலிப்பது வேறு எங்கும் காண முடியாத தனிச் சிறப்பு. இங்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்யும்போது அம்பாளின் வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அம்மன் சிலைக்கு மேற்கூரை எதுவும் இல்லாமல் திறந்தவெளியாக இருந்துள்ளது. காலப்போக்கில் அம்மனுக்கு மேல் தனி விமானம் கட்டப்பட்டது. ஆனாலும், பழைய ஐதீகம் மாறாமல் வெயிலும், மழையும் அம்மனின் மேல் விழும்படியாக விமானத்தின் மேல் ஒரு சிறு துவாரம் உள்ளது.
நெல்லை மாவட்டம், சீவலப்பேரியில் உள்ளது விஷ்ணு துர்கை கோயில். நெல்லை நகரின் கிழக்கு திசையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில். பொதுவாக, துர்கை என்றால் ரெளத்ரமாக ஆயுதங்களோடு காட்சி தருவார். ஆனால், இங்கு மட்டுமே துர்கை சாந்தரூபிணியாக வலது கையில் புஷ்பம் வைத்த நிலையில் காட்சி தருகிறார். சங்கரநாராயணராக விஷ்ணு அமர்ந்த நிலையிலும், நின்ற கோலத்தில் துர்கை அம்மனும் காட்சி தரும் கோயில் இது. துர்கையும், விஷ்ணுவும் அண்ணனும் தங்கையுமாக ஒரே சன்னிதியில் காட்சி தருவது இங்கு மட்டுமே.
திருநெல்வேலியில் உள்ளது நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் . கோயில். பொதுவாக, சிவன் கோயில்களில் ஒரு துர்கையம்மன் சன்னிதிதான் இருக்கும். ஆனால், இங்கே சிவதுர்கை, விஷ்ணு துர்கை என இரு துர்கை அம்மன்கள் உள்ளனர். இங்கு சிவன் சன்னிதியில் விஷ்ணு துர்கையும், காந்திமதி அம்பாள் சன்னிதியில் சிவ துர்கையும் அருளுகின்றனர். அம்பாள் சன்னிதியில் உள்ள துர்கை வடக்கு நோக்கி காட்சி தருவது சிறப்பு அம்சம். இவளுக்கு மஞ்சள் நிற மாலைகள் சாத்தி வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பத்து கரங்களுடன் காட்சி தரும் இவள் உக்கிரமாக காளி அம்சத்துடன் அருளுகிறார்.
சென்னை, பாரிமுனை பகுதியின் பழம்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அருள்மிகு காளிகாம்பாள் கோயில் தம்புசெட்டி தெருவில் இருக்கிறது. இங்குள்ள உத்ஸவர் காளிகாம்பாளுக்கு வலது புறத்தில் மகாலட்சுமியும், இடது புறத்தில் சரஸ்வதியும் சாமரம் வீசும் கோலத்தில் உள்ளனர். இம்மூவரையும் வணங்கினால் கல்வி, செல்வம், வீரம் பெற்று வாழ்வில் சிறக்கலாம் என்பது ஐதீகம். இத்தல அம்பாள் பாதத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இவருக்கு பன்னீர் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், இத்தலத்தில் உங்கள் வேண்டுதல்கள் குறைவின்றி நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.