
தன்னுடைய பக்தர்கள் வீடு இல்லாமல் தவிக்கும்போது தனக்கு மட்டும் எதற்கு கோவில் என்று வெட்ட வெளியில் வந்து அமர்ந்த அம்மன் தான் திருச்சியில் இருக்கும் உறையூர் வெக்காளியம்மன். இந்தக் கதையைப் பற்றி விரிவாக இப்பதிவில் காண்போம்.
முற்கால சோழர்களின் தலைநகராக உறையூர் இருந்தது. அந்த உறையூரின் காவல் தெய்வம் தான் வெக்காளியம்மன். இந்த கோவிலில் இருக்கும் அம்பாள் வானமே கூரையாக வெட்ட வெளியில் தான் அமர்ந்திருக்கிறாள். இதற்கு பின்பு ஒரு வரலாறே இருக்கிறது.
முன்னொருக்காலத்தில் உறையூரை வன்பராந்தகன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். சாரமாமுனிவர் என்ற முனிவர் ஒரு அழகான நந்தவனம் அமைத்து அதில் அழகிய வண்ண மலர்களை பயிரிட்டு வளர்த்து வந்தார். அந்த மலர்களை திருச்சி மலைக்கோட்டையில் இருக்கும் தாயுமானவர் சுவாமிக்கான பூஜைக்காக பயன்படுத்தி வந்தார்.
பிராந்தகன் என்ற பூ வணிகன் சாரமாமுனிவரின் நந்தவனத்தில் இருந்த பூக்களை மன்னருக்கு கொண்டு சென்று கொடுக்க ஆரம்பிக்கிறார். இதைப்பார்த்த சாரமாமுனிவருக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது. சிவபெருமானுக்காக பார்த்து பார்த்து வளர்க்கும் மலர்களை மன்னருக்கு கொண்டு சென்றுக் கொடுக்கலாமா? என்று எண்ணி மன்னனிடமே சென்று முறையிடுகிறார் சாரமாமுனிவர். ஆனால், மன்னன் சாரமாமுனிவரை அவமதித்து அனுப்பிவிடுகிறார்.
இதை சிவபெருமானிடம் முறையிடுகிறார் சாரமாமுனிவர். தன் பக்தனுக்கு ஒரு குறை என்றால் சிவபெருமானால் தாங்க முடியுமா? உடனே அவர் தனது பார்வையை உறையூர் பக்கமாக திருப்புகிறார். உறையூர் முழுவதும் மண் மாரியாக பொழிய ஆரம்பிக்கிறது. மண் மாரி பொழிந்து மக்களின் வீடுகள் மூடத்தொடங்குகிறது. இதைப் பார்த்த ஊர் மக்கள் பயந்து உறையூரின் காவல் தெய்வமான வெக்காளியம்மனிடம் சென்று முறையிடுகிறார்கள்.
வெக்காளியம்மன் சிவப்பெருமானை நோக்கி வேண்டுகிறார். உடனே மண் மாரி நிற்கிறது. மண் மாரி பொழிந்ததால், மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து வெட்டவெளியில் தங்க ஆரம்பிக்கிறார்கள். மக்களின் துயரைப் பார்த்த வெக்காளியம்மன் தன் மக்களே இப்படி வெட்டவெளியில் இருக்கும் போது தனக்கு மட்டும் எதற்காக கோவில் என்று வெட்டவெளியில் வந்து அமர்ந்தாள்.
அதனால் தான் அம்பாள் இன்றைக்கும் வானமே கூரையாக வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். நம்முடைய கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் எழுதி வைத்துவிட்டு வந்தால் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.