
தமிழ்நாட்டில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரில் அமைந்துள்ள 1300 வருடம் பழமையான கோவில் தான் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.
தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பவர் தான் வைதீஸ்வரர். இக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நாகை மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரர் கோவிலுக்கு இணையாக சொல்லப்படுகிறது இந்தக் கோவில்.
கரிகாலச்சோழன் ஆட்சி செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட சூழலில் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்கிறது. அதனால் பித்தம் பிடித்த அரசன் குறத்தி ஒருவரிடம் குறிக்கேட்க, அவள் கொங்குநாட்டில் மக்களை குடியேற்றி ஆலயங்களை கட்டினால் பித்தம் தொலையும் என்று கூறினாள்.
அதன்படி அரசன் பரிவாரங்களுடன் வந்து கொங்கு நாட்டில் 36 பெரிய ஆலயங்களையும், 320 சிறிய ஆலயங்கள், 32 அணைகளை கட்டி திருப்பணி செய்து பைத்தியம் நீங்கப்பெற்று குணமானதாக சொல்லப்படுகிறது.
கரிகாலச்சோழன் தன்னுடைய படைவீரர்களுடன் இந்த பகுதியில் வந்து தங்கியிருந்த போது, படை வீரர்கள், அங்கு உள்ளது சுயம்புலிங்க திருமேனி என்று தெரியாமல், தங்கள் காயங்களுக்கு மருந்துப் போடுவதற்காக அதன் சிரசின் மீது மூலிகைகளை அரைத்து அந்த காயங்களின் மீதுப் போட்டு குணமடைந்தார்கள்.
அப்போது அங்கிருந்த அரண்மனை வைத்தியர் மூலமாகவே இது சுயம்புலிங்க திருமேனி என்று தெரியவந்தது. உடனே கரிகாலச் சோழன் சுயம்புலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ‘வைத்தியலிங்கமுடையார்’ என்று திருநாமத்தை சூட்டி ஆலய கும்பாபிஷேகமும் செய்துவைத்தார்.
கரிகாலனின் படைவீரர்கள் தெரிந்தோ, தெரியாமலோ சுயம்புலிங்கத்தின் மீது மூலிகைகளை அரைத்து தன் காயங்களுக்கு போட்டனர்.
அதனால் தான் இந்த லிங்க திருமேனி தீராத நோய்களை தீர்க்கும் வைதீஸ்வர முடையாராக இருக்கிறார். பல தீராத நோய்களை தீர்க்க நல்லெண்ணெய் காப்பு சாற்றி அதனையே அருட்பிரசாதமாய் உட்கொண்டு அதையே அருமருந்தாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.
மேலும் லிங்கத்தின் சிரசில் சாற்றிய விபூதியும், வில்வ இலையும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஸ்ரீ தன்வந்திரி பெருமானும், ஸ்ரீ வைத்தியநாத பெருமானும் இந்த திருத்தலத்தில் மருத்துவர்களாக இருந்து அருள்பாலிப்பது மிகவும் விஷேசமாகும். திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் தங்கள் கைகளால் இத்தலத்தில் அமைந்திருக்கும் நந்திக்கும், பெருமானுக்கும் எண்ணெய் காப்பிட்டு முறையாக பூஜைகள் செய்தால் திருமணம் அமைவதைக் கண்கூடாக காணலாம்.