கோபால்சாமி மலை குடவரைக் கோவில் கேள்விப்பட்டதுண்டா?

கோபால்சாமி மலை குடவரைக் கோவில்.
கோபால்சாமி மலை குடவரைக் கோவில்.
Published on

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் கோபால்சாமி குடவரைக் கோவில் உள்ளது. இது 1000 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கோவில். மலையை குடைந்து அதன் உள்ளே கர்ப்பகிரகம் அமைத்துள்ளனர். 

திருமங்கலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இடைப்பட்ட இடத்தில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில், மோதகம் என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றின் மேல் கட்டப்பட்ட குடவரை கோவில் இது. இன்றைக்கு மோதகம் என்று அழைக்கப்பட்ட அந்த ஊர் இல்லை. கோவிலின் தல விருட்சமாக புளியமரம் உள்ளது. இந்த புளியமரம் ஒரு அதிசய மரமாக பார்க்கப்படுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் காய் காய்க்கும் என்று கூறுகின்றனர்.

இந்த மலை தங்கம் போலவே ஜொலிப்புடன் காணப்படுவதால் இதனை தங்கமலை என்றும் அழைக்கிறார்கள். கருங்கல்லால் ஆன மண்டபங்கள், அவற்றைத் தாங்கும் பிரம்மாண்டமான தூண்கள், திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் அற்புதமான சிற்பங்கள் என அனைத்தும் ஒரே ஒரு செங்குத்து பாறை போன்ற குன்றில் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் அடிவாரத்தில் ரங்கநாதரும் குன்றின் மேல் கோபால்சாமி எனப்படும் விஷ்ணுவிற்கும் என இரு வகையாக கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பிரம்மா, ஆஞ்சநேயர், கருடன் சூழ அனந்த சயன கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். மலை மேல் சத்யபாமா ருக்மணி சமேத கோபாலசாமி காட்சி தருகிறார். மலை உச்சியில் உள்ள கோபால்சாமி கோவிலில் ஒரே கல்லை குடைந்து உருவாக்கப்பட்ட ஜன்னல் போன்ற அமைப்பில் இருந்து காற்று மிக அழகாக வீசுகிறது.

இதையும் படியுங்கள்:
எதிர்வினை ஆற்றாமையே அமைதிக்கு மாற்று வழி!
கோபால்சாமி மலை குடவரைக் கோவில்.

மூலஸ்தானத்தைச் சுற்றி மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள் ஓவியங்களாக உள்ளன. இங்கே பரத்வாஜ ரிஷி தங்கி, தவம் செய்ததாக கூறப்படுகிறது. பெரியாழ்வாரின் அபிமான ஸ்தலமாகவும் உள்ளது இந்த மலைக்கோவில். இந்த குடைவரை கோவில் மலை உச்சியில் உள்ள மண்டபத்திலிருந்து பார்த்தால் தென்மேற்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரத்தையும், தென்கிழக்கில் சிவகாசியையும், நீண்ட தொலைவில் உள்ள கிராமங்களையும் இயற்கை காட்சிகளையும் கண்டு களிக்க முடிகிறது.

சொர்ணகிரி (தங்கமலை) என்று அழைக்கப்படும் இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி, ஏகாதசி, புரட்டாசியில் கருட சேவை, நவராத்திரி, திருக்கார்த்திகையின் போது மலை உச்சியில் தீபமேற்றுதல் போன்ற திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோவில் காலை 8:30 மணி முதல் ஒரு மணி வரை திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com