
‘தேன்’ என்று சொன்னதும் அதன் சுவையே நாக்கில் எச்சிலை வரவழைத்து விடும். பண்டைக்காலத்தில் தேனும் திணைமாவும்தான் பெரும்பாலானோர் பிரதான உணவாகும். தேன் இனிப்புக்குப் பெயர் பெற்றது. ஆதிகாலந்தொட்டே தேனை பலரும் ஒரு மருத்துவ உணவாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேனில் சுவை மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறையவே உள்ளன. சித்தா மற்றும் ஆயுா்வேத வைத்தியத்திலும் தேன் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தக் காலத்தில் மகரிஷிகள், மகான்கள், சித்தர்கள் பலரும் தேனை முக்கிய பானமாக, உணவாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என வரலாறு கூறுகிறது!
தேன் என்பது பூக்களில் உருவானாலும், அவற்றை சேமிப்பது தேனீக்களின் வேலையாகும். அதற்குத் தகுந்த வகையில் அதன் உடல் உறுப்புகள் அமைந்துள்ளன. தேனை சேகரிக்க மூவகைத் தேனீக்கள்உண்டு. அதாவது மலைத்தேனி, கொம்புத்தேனி, அடுக்குத்தேனி. இறந்த உடலை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும் தன்மை தேனுக்கு உண்டு என்பது சிறப்பு.
சிறப்பு குணம் வாய்ந்த தேனை சிலர் வீடுகளுக்கே சென்று சர்க்கரைப் பாகை கரைத்து கெமிக்கல் சோ்த்து போலியாக சுத்தமான தேன் எனச் சொல்லி ஏமாற்றுவதை நாம் அன்றாட வாழ்வில் பார்க்கலாம். நாம்தான் விழிப்புடன் அதன் தரத்தை சோதனை செய்து வாங்க வேண்டும்.
தேனில் கொம்பு தேன், மலை தேன், புதிய தேன், புற்று தேன், மரபொந்து தேன், பழைய தேன் என பல வகைகள் உண்டு.
கொம்பு தேன்: மாந்தம், பசியின்மை, தோஷங்களால் ஏற்படும் பிணிகளை அகற்ற வல்லது!
மலை தேன்: நுரையீரல் தொடர்பான அனைத்து நோய்களையும் தீா்க்கும் குணம் கொண்டது!
மர பொந்து தேன்: இது உடலுக்கு உஷ்ணம் கொடுத்தாலும், அஜீரணம், விக்கல், இருமல், சளி, காச நோய்களை குணப்படுத்தும்!
புற்று தேன்: கண் பார்வை தொடா்பான நோய்களைத் தீா்க்க வல்லது. அஜீரணம் வாந்தியைக் கட்டுப்படுத்தும்.
புதிய தேன்: உடலுக்கு சக்தியைத் தரவல்லது.
பழைய தேன்: நீண்ட நாளான, பராமரிக்காத புளித்துப்போன தேன் தான் பழைய தேன். அதை சாப்பிடக் கூடாது!
சஞ்சீவி மூலிகையான தேன், சுத்தமானதுதானா என சோதனை செய்ய பேப்பரில் ஊற்றினால் பேப்பர் ஊறாது! முத்துபோல நிற்கும். அபரிமிதமான அனைத்து வகை ஊட்டச்சத்து மிகுந்த உணவாகவே தேன் பல வகையிலும் பயனளிக்கிறது. தேன் என்பது இயற்கை கொடுத்த வரம்!
எனவேதான் தேன் எப்போதும் நிரந்தரமாக நமது வாழ்வியலோடு இணைந்திருக்கிறது. ஊட்டச்சத்து மிக்க தேனை சித்த வைத்தியங்களில் அடிப்படையாக சோ்த்துக்கொள்வதிலிருந்தே அறியலாம் இது ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும் என்பதை! எனவே, சுத்தமான தேனை பயன்படுத்தி நீண்ட நாள் நோய் நொடியில்லாமல் வாழ்வோம்!