இன்று குரு பூர்ணிமா - தெய்வத்தையும் விட ஒரு படி உயர்ந்தவர் குரு!
“குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ!
குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மஹேஷ்வரர் (சிவன்), குருவே தன்னை வெளிப்படுத்தும் எல்லையற்ற பிரம்மம். அந்த மரியாதைக்குரிய குருவுக்கு வணக்கங்கள் என்பதே இந்த மந்திரத்தின் பொருளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தின் பௌர்ணமி திதி அன்று இந்த குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
குரு என்பதன் உண்மையான பொருள் என்னவென்றால் "அறியாமை என்கிற இருளைப் போக்குபவர்" என்பதாகும். "கு" என்றால் "அறியாமை இருள்" என்றும் "ரு" என்றால் "நீக்குபவர்" என்றும் பொருள்.
மகாபாரதத்தை எழுதிய வேத வியாசர் இந்த நாளில் தான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. முதன் முதலில் வேதத்தை வியாசர் தான் எழுத்து வடிவத்தில் எழுதத் தொடங்கினார். அவரை போற்றும் வகையிலும் மற்றும் நம்முடைய இந்து மதத்தின் குருக்களாகத் திகழ்ந்த ஆதி சங்கரர், காஞ்சி பெரியவர், ராகவேந்திரர் போன்றவர்களை போற்றும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தை தவிர புத்த மதத்தினர், சீக்கியர், ஜெயின் மத்தை சேர்ந்தவர்களும் இந்த குரு பூர்ணிமாவை கொண்டாடுகிறார்கள். தங்களுடைய குருவிற்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அந்த காலத்திலே குருகுலத்திலே தான் எல்லோரும் பயிலுவார்கள். அங்கே குருக்கள் தான் வேதத்தையும் கல்வியையும் மற்றும் அனைத்து விதமான வீரப் பயிற்சிகளையும் கற்றுத் தருவார்கள்.
மாதா பிதாவிற்கு அடுத்தபடியாக திகழ்பவர் இந்த குரு தான். குருவால் மட்டும் தான் நம்மை நல்வழியில் நடத்தி செல்ல முடியும். குரு என்பவர் நமக்கு கற்றுத் தருபவர். ஆன்மீகமோ அல்லது கல்வியோ அல்லது விளையாட்டோ அல்லது கலையோ எதுவாக இருந்தாலும் அதை நமக்கு கற்று கொடுப்பவரை குருவாகத் தான் கருத வேண்டும்.
ஒரு கோவிலை எடுத்து கொண்டால் கூட கோவிலில் நமக்காக பூஜை செய்பவரை குருக்கள் என்று தானே அழைக்கிறோம். ஏனென்றால் தெய்வத்தையும் விட ஒரு படி உயர்ந்தவர் தான் இந்த குரு என்பவர்.
எல்லோருக்குமே அவரவர் குடும்பத்திற்கென்று ஒரு குருவோ இல்லை வாத்தியாரோ இருப்பார். நாம் என்ன செய்வோம்?? எந்த ஒரு நல்லது அல்லது கெட்ட விஷயத்திற்கும் அவரை கலந்து ஆலோசித்து அவரின் கூற்று படித் தானே நடக்கிறோம். கல்யாணமாக இருக்கட்டும், சீமந்தமாக இருக்கட்டும், நாம் அவரை கேட்டு அவரின் சொல்படி தானே தேதியை முடிவு செய்கிறோம். ஆகவே குரு என்பவர் நம்முடைய அனைத்து முன்னேற்றத்திலும் இன்பங்களிலும் துன்பங்களிலும் நம்மை வழி நடத்தி செல்பவராவார்.
இன்னும் சொல்லப் போனால் நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் நாம் முதன் முறையாக சேர்ந்த போது நமக்கு வேலையை கற்றுக் கொடுத்த சீனியர்களும் குருவிற்குச் சமம் தான்.
ஆகவே இந்த நாளிலே நமக்கு அறிவை புகட்டி ஒளியை தந்த அனைத்து குருமார்களையும் பரிபூர்ணமாக நமஸ்கரித்து நம்முடைய நன்றியை அவர்களுக்கு செலுத்துவோம்...