குருவாயூர் கோயில் உருளி குன்றிமணி ரகசியம் தெரியுமா?

Guruvayur Koyil Uruli Kundrimani ragasiyam Theriyumaa?
Guruvayur Koyil Uruli Kundrimani ragasiyam Theriyumaa?https://www.youtube.com

ஸ்ரீ கிருஷ்ணன் குருவாயூரப்பனாக அருள்பாலிக்கும் குருவாயூர் திருக்கோயிலில், பெரிய உருளி ஒன்றில் குன்றிமணிகள் வைக்கப்பட்டிருக்கிறது. குழ்ந்தை ஸ்ரீ கிருஷ்ணனை தரிசிக்க வரும் பக்தர்கள் அந்த உருளில் இரண்டு கைகளையும் விட்டு அந்த குன்றிமணிகளை அளைந்தபடி தங்களது வேண்டுதல்களை குருவாயூரப்பனிடம் வைக்கின்றனர். இந்த விசேஷ வழிபாட்டின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

முன்னொரு காலத்தில் வயதான பெண்மணி ஒருவர் குருவாயூர் திருத்தலத்தில் இருந்து வெகு தொலைவில் வசித்து வந்தார். அந்த மூதாட்டியின் இஷ்ட தெய்வமாக குருவாயூரப்பனே இருந்தார். என்றாவது ஒருநாள் குருவாயூரப்பனை தரிசித்திட வேண்டும் என்பதுதான் அந்த மூதாட்டியின் வாழ்நாள் பிரார்த்தனையாக இருந்தது. குருவாயூரப்பனை எப்படியும் தரிசித்துவிடுவது முடிவெடுத்தாள் அந்த மூதாட்டி.

குருவாயூரப்பனை தரிசிக்கச் செல்லும்போது வெறுங்கையுடன் சென்றால் நன்றாகவா இருக்கும்? ஏதாவது ஒன்றை காணிக்கையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். பொன்னும் பொருளும் கொண்டு போக அவளிடம் வசதி இல்லை. என்ன செய்வது என யோசித்தாள். தனது வீட்டில் நின்ற மஞ்சாடி  குன்றிமணி மரத்திலிருந்து உதிரும் (குன்றிமணி) முத்துக்கள் கண்ணில் பட்டன. அவற்றை சேகரித்து சென்று குருவாயூரில் இருக்கும் பாலகனான பாலகிருஷ்ணனுக்கு அளித்து விடலாம் என்று மூதாட்டி முடிவு செய்தாள்.

குருவாயூர் கண்ணனை கண்டு விடுவது என்று முடிவெடுத்து, தனது பயணத்தையும் தொடங்கி ஒரு மாத காலத்தில் அக்கோயிலைச் சென்று அடைந்து விட்டாள். அந்த மூதாட்டி சென்ற அன்று கோயில் பரபரப்பாக இருந்தது. மாதம் முதல் நாள் அன்று அப்பகுதி அரசன் தனது பக்தியின் வெளிப்பாடாக குருவாயூர் கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி மன்னன் யானையை கோயிலுக்கு வழங்க வந்திருந்தான். அனைவரும் பரபரப்பாக இருந்த பக்தர்களை அப்புறப்படுத்தி கொண்டிருந்தார்கள். சேவகர்களின் அலட்சியத்தால் குருவாயூரப்பனை பார்க்க வந்திருந்த மூதாட்டியை கீழே தள்ளி விட்டனர். அவர் பையில் வைத்திருந்த குன்றிமணிகள் அனைத்தும் தரையில் சிதறி ஓடின.

இதையும் படியுங்கள்:
கடவுள்கள் பேசிக்கொள்வதை கேக்கணுமா? அப்போ இந்தக் கோயிலுக்குப் போங்க!
Guruvayur Koyil Uruli Kundrimani ragasiyam Theriyumaa?

அப்போது கோயிலுக்கு அர்ப்பணிப்பதற்காகக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓடியது. ஆலயத்தில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியது. அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் குருவாயூரப்பனிடம் பிரச்சனம் கேட்டனர். அப்போது கருவறையிலிருந்து ஒரு குரல் கேட்டது. ‘நீங்கள் எனது பக்தையை உதாசீனப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை எனக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்த குன்றிமணிகள் எனக்கு வேண்டும்’ என்று அந்த குரல் சொன்னது.

அப்போதுதான் ஆலயத்திற்கு வெளியே மூதாட்டி கொண்டு வந்த காணிக்கை சிதறிக் கிடப்பதைக் கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த மூதாட்டியை அனைவரும் கவனித்தனர். உடனடியாக ஓடிச் சென்று சிதறி கிடந்த குன்றி மணிகளை பொறுக்கி எடுத்து அந்த மூதாட்டியிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டனர். அதன் பிறகு அவரை சகல மரியாதையுடன் ஸ்ரீகிருஷ்ணன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஆசையுடன் குன்றிமணிகளை குருவாயூரப்பன் முன்பாக சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அந்த மூதாட்டி நினைவாகத்தான் இன்றும் குருவாயூர் கோயிலில் குன்றி மணிகள் வைக்கப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com