

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் உள்ள விருபாக்ஷர் ஆலயம் ஆன்மீகத்தோடு அதிநவீன அறிவியல் கோட்பாட்டையும் கலந்து பக்தர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
இங்கு ஒரு ஊசி துவார கேமரா அமைப்பு உள்ளது. இது சற்று இருளாக இருக்கும் எதிர்பக்கத்தில் கோவிலின் தலைகீழ் சித்திரத்தைக் காண்பிக்கிறது.
இந்தக் கட்டிடக்கலை மாண்பானது இயற்பியல் பற்றியும் ஒளி பற்றியும் அந்தக் காலத்திலேயே நமது சிற்பிகள் நன்கு அறிந்திருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது! விஜயநகர சாம்ராஜ்யத்தின்போது 600 ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக்கப்பட்ட சிவாலயமாகும் இது.
ஊசி துவார கேமரா அமைப்பு என்றால் என்ன?
கோவில் சுவரில் ஓரிடத்தில் ஒரு சிறிய துவாரம் உள்ளது. இயற்பியல் தத்துவத்தின்படி ஒரு சிறிய துவாரத்தின் வழியே ஒளி ஊடுருவிச் செல்லும்போது அது தலைகீழான பிம்பத்தை அதற்கு எதிர்ப்புறத்தில் ஒரு கேமரா தருவதைப் போலத்தருகிறது.
இங்கு வரும் பக்தர்களும் யாத்ரீகர்களும் இந்த துவாரத்தின் வழியே தலைகீழ் பிம்பத்தை எதிர்புறத்தில் இருட்டாக உள்ள இடத்தில் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த ஒளியியல் நிகழ்வு (Optical Phenomenon) தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல. இயற்பியல் அறிவும் ஒளியியல் அறிவும் நன்கு அறிந்தவர்களே இதை அமைத்திருக் கிறார்கள் என்பது தெளிவு. ஊசித்துவாரம் உள்ள இடம், அது காட்டவேண்டிய பிம்பத்தின் உயரம் ஆகிய அனைத்துமே மிக மிக முக்கியமானவை. துளையின் அளவு தலைகீழான ஒரு பிம்பத்தைத் துல்லியமாகக் காட்டவேண்டுமென்றால் அது நூறில் ஒரு பங்கு தூரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் இந்த தலைகீழ் பிம்பம் எதிர்ப்புறத்தில் உருவாகும்.
விருபாக்ஷர் ஆலயம் யுனெஸ்கோவின் பண்பாட்டு காப்பகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதனுடைய மூல அமைப்பு ஏழாம் நூற்றாண்டில் தோன்றி இருக்கக் கூடும் என்று வரலாற்று நிபுணர்கள் கருதுகின்றனர். சாளுக்கியர், ஹொய்சாளர், விஜயநகர அரசர்கள் இங்கு வழிபட்டு இதை அமைத்து அபிவிருத்தி செய்து வந்துள்ளனர்.
இங்குள்ள ஆலய அமைப்பு வியக்க வைக்கும் ஒன்று. கிழக்கு திசையில் ஒன்பது நிலை கோபுரத்தை இந்த ஆலயம் கொண்டுள்ளது. கோபுரத்தின் உயரம் 50 மீட்டர். (164 அடி) கிருஷ்ணதேவராயர் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இதை அவரே விரிவாக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தக் கோவிலில் உள்ள பல கணித அதிசயங்கள் கணித நிபுணர்களை வியக்க வைப்பதோடு சாமானியர்களை வெகுவாக ஈர்க்கிறது. முக்கோண வடிவில் உள்ள கோவிலின் அமைப்பு திருப்பித் திருப்பி இதே வடிவ அமைப்பை மேல்நோக்கி அமைத்திருப்பது இவர்களின் அதிநுட்ப கணித அறிவைக் காட்டுகிறது.
இப்படி வியக்க வைக்கும் அறிவியல் அமைப்பிலான பல கோவில்கள் கர்நாடக மாநிலத்தில் அமைக்கப் பட்டிருப்பதை உலகத்தினர் இன்னும் முழுதுமாக அறியவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான்!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here