தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் மல்லூர் எனும் தலத்தில் காட்டுக்கு நடுவே அமைந்துள்ளது ஸ்ரீ ஹேமாச்சல லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். இக்கோயில் நரசிம்மரின் சிலை மற்ற சிலைகளைப் போல இல்லாமல், மனிதரின் சருமத்தைப் போன்று மிகவும் மென்மையாகக் காணப்படுகிறது. இந்த நரசிம்மர் சிலையை அழுத்தினால் சருமத்தில் ஒரு உள் தள்ளல் உருவாவது ஆச்சரியம்.
4000 ஆண்டுகள் பழைமையான ஹேமாச்சல லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் புட்டகொண்டா என்ற மலை உச்சியில் அமைந்துள்ளது. அகஸ்திய முனிவர் இந்த மலைக்கு ஹேமாச்சலம் என பெயரிட்டதாகவும், ராவணன் தனது சகோதரியான சூர்ப்பனகைக்கு இந்த இடத்தை பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சியின்போது இக்கோயில் செழித்து வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் 10 அடி உயரத்தில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி அழகுற வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். கோயிலின் கொடிமரம் 60 அடி உயரம் கொண்டது. கோயிலுக்கு அருகில் பாறை வடிவ உக்ர ஆஞ்சனேய சுவாமி சிலை உள்ளது.
இக்கோயில் வனப்பகுதியில் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளதால் இறைவனை தரிசிக்க150 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். புனித கோதாவரி ஆறு இங்குள்ள காட்டின் வழியாகப் பாய்கிறது. கோயிலுக்கு அருகில் நரசிம்மரின் பாதத்திலிருந்து நீரோடை ஒன்று ஓடுகிறது. இதற்கு, ‘சிந்தாமணி ஜலபதம்’ என்று பெயர். இந்த நீர் மிகவும் புனிதமாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது.
சுயம்புவான இந்த நரசிம்மர் சிலையிலிருந்து அவ்வப்போது இரத்தம் கசிவதால் இங்குள்ள அர்ச்சகர்கள் நரசிம்மரின் சிலையை சந்தனத்தைக் கொண்டு மூடி இரத்தப் போக்கை நிறுத்துவதாகக் கூறுகிறார்கள். மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாகப் போற்றப்படும் நரசிம்மர், இக்கோயிலில் உக்கிர நரசிம்மராகக் காட்சி தருகிறார்.
இக்கோயிலின் பிரம்மோத்ஸவ விழா வைகாசி மாதத்தில் (ஏப்ரல் / மே) வெகு சிறப்பாக நடைபெறும். 2003ம் ஆண்டு கோதாவரி புஷ்கரத்தின்போது இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. சுற்றிலும் பசுமை சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் தியானம் மற்றும் பிரார்த்தனை செய்ய நிறைய பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பத்ராசலத்திலிருந்து 90 கி.மீ. தொலைவிலும், வாரங்கல் நகரத்திலிருந்து 130 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கோயில் காலை 8.30 முதல் 1 மணி வரையும், மதியம் 2.30 முதல் 5.30 மணி வரை திறந்திருக்கும். காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் விரைவில் கோயில் நடையை மூடி விடுகிறார்கள்.