

ஆணோ, பெண்ணோ கருப்பையில் உருவானதிலிருந்து இறுதி முடிவு வரை வாழ்க்கையில் தான் எத்தனை சடங்குகள்! எந்த மதமாக இருந்தாலும் சரி, சடங்குகளின் மதிப்பே தனி தான்!
இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் ஜீவாத்மாவின் பரிசுத்திக்காக நாற்பது ஸம்ஸ்காரங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை காஞ்சி பெரியவர் விளக்குகிறார் இப்படி:
ஜீவாத்மாவுக்குப் பரிசுத்தி ஏற்படுவதற்காக நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று சொன்னேன். அவை கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அன்ன ப்ராசனம், சௌளம், உபநயனம், குருகுலவாஸத்தில் செய்ய வேண்டிய பிராஜாபத்தியம் முதலிய நாலு வேத விரதங்கள், அது முடிந்ததும் செய்கிற ‘ஸ்நானம்’, பிறகு விவாஹம், அதன்பின் கிருஹஸ்தன் செய்யவேண்டிய ஐந்து நித்ய கர்மாக்களாகிய பஞ்ச மஹா யக்ஞங்கள் ஆக, இதுவரை மொத்தம் 19; இதோடு கிருஹஸ்தன் செய்ய வேண்டிய பாக யக்ஞங்கள் ஏழும், ஹவிர் யக்ஞங்கள் ஏழும், ஸோம யக்ஞங்கள் ஏழும் ஆக யக்ஞங்கள் இருபத்தொன்றும் ஸம்ஸ்காரங்களே ஆகும். 19+21=40 ஸம்ஸ்காரம்.
நாற்பது ஸம்ஸ்காரங்களில் தினந்தோறும் பண்ண வேண்டியவை சில இருக்கின்றன. சில சில காலங்களில் பண்ணவேண்டியவை சில. ஆயுளில் ஒரு தரம் பண்ண வேண்டியவை சில.
இந்த சடங்குகளினால் என்ன பயன்?
இதை ஆராயப் புகுந்த நவீன அறிவியல் ஆய்வு மிகக் கடுமையான மனோ வியாதியான borderline personality disorder எனப்படும் BDF நோயைத் தீர்க்க வல்லது இந்த சடங்குகளே என கண்டுபிடித்துள்ளது.
தன்னை சமூகம் தள்ளி வைப்பது, மிக அதிகமாக உணர்ச்சி நிலை தடுமாறுதல், மிக மிக அதிக கோபம், நிலையில்லாத உறவுகள், தன்னை அழிக்கும்படியான திடீர் முடிவுகளை எடுத்தல், தனக்குத் தானே கெடுதியைச் செய்து கொள்வது, நல்ல தொடர்புகளை முறிப்பது ஆகிய இந்த ஒன்பது அறிகுறிகள் இருந்தால் அதைப் போக்க நீங்கள் நாட வேண்டிய தீர்வு: நமது முன்னோர்கள் சொல்லி வைக்கும் சடங்குகளை அந்தந்தக் காலத்தில் சரியாகச் செய்வது தான் என்கிறது அறிவியல்.
வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் பல திருப்பு முனைகள் எந்த பலசாலியையும் உலுக்கி விடுவதைப் பார்க்கிறோம். இதையெல்லாம் தவிர்த்து குடும்ப உறவை மேம்படுத்தி, சொந்தங்களோடும் நண்பர்களோடும் வாழ்க்கையை நன்கு அனுபவிக்க உதவுவது சடங்குகளே.
மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும் சாப்ட்வேர் – (மென்பொருள்) சடங்குகளே என்று முடிவு கட்டும் அறிவியல் ஆய்வு அது மூன்று வழிகளில் முன்னேற்றத்தை அளிக்கிறது என்று கூறுகிறது.
1. அமைதி:
மனிதனின் மூளையில் உள்ள அமைப்பான பயத்தைக் கண்டுபிடிக்கும் அமைப்பு அமிக்தலா ஆகும். அது அமைதிப்படுத்தப்படும் போது நாம் எப்போதும் ஒரே நிலையில் இருக்கப் பழக்கப்படுத்துகிறோம்.
2. தர்மம்:
ப்ரீ ஃப்ரண்டல் கார்டெக்ஸ் மிகப்பெரிய காரியங்களை நடத்தும் போது அதிக மனச்சுமையைத் தருகிறது. விவாகமோ, பிள்ளைக்குப் பெயர் சூட்டலோ ஏன் ஒருவரின் இறுதிச் சடங்கோ நிலைப்படுத்தப்பட்ட வழக்கமான வழியில் செலுத்தப்பட்டும் செய்யப்படும்போது போது மனச்சுமை குறைகிறது.
3. தொடர்பு:
நண்பர்களும் உறவினர்களும் ஒரே காரியத்துக்காக ஓரிடத்தில் கூடும் போது அன்பு அலைகளான கெமிக்கல்களைச் மூளை சுரக்கிறது. ஒரே உற்சாகம் தான் அல்லது துக்கம் என்றால் அதை அனைவரும் பகிரும் போது அது மனதைச் சிறிதளவே பாதிக்கும்.
ஆகவே சடங்குகளை அது சிறிதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, கடைப்பிடிப்பதே உற்சாகமான வாழ்க்கைக்கான ஆதார அடிப்படை என்பதை முன்னோர்கள் கூறும் போது முன்பு சந்தேகப்பட்டவர்களும் கூட, இப்போது அறிவியல் அதை வியந்து ஆமோதிக்கும் போது ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே!