

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரம் கிராமத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தலம் கோபிநாத சுவாமி கோயில் ஆகும். இங்கு மூலவர் கோபிநாத சுவாமி கிருஷ்ணராகவும், தாயாராக கோப்பம்மாளாகவும் அருள்பாலிக்கின்றனர். உற்சவர் வெண்ணெய் உருண்டையை பக்தர்களுக்கு ஊட்டுவது போன்ற அமைப்பில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இக்கோயில் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் பழநி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 400 அடி உயரமான மலை உச்சியில், 600-க்கும் மேற்பட்ட படிகளைக் கடந்து செல்லக்கூடிய இடத்தில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் கோபிநாத சுவாமி புல்லாங்குழலூதும் கோலத்தில்நின்ற கோலத்தில் உள்ளார். தாயார் கோப்பம்மாள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்த நிலையில் காட்சியளிக்கிறார்.
மலையடிவாரத்தில் பக்தர்கள் முடிகாணிக்கை செய்யும் வசதி, பொங்க லிட்டு வழிபட தனியாக மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கு முன் அடித்தள மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார் சந்நிதிகளில் வழிபட்டுச் செல்கின்றனர்.
கோபிநாத சுவாமி கோயில் வரலாறு
மழை இல்லாததால், பெல்லாரி நாட்டில் வறட்சி நிலவியது. நாட்டை ஆண்ட வல்லாள மன்னன், தன் மனைவி கோப்பம்மாள் மற்றும் கோபிநாதன் என்ற மகனுடன் வாழ்ந்து வந்தான். அவர்களிடம் ஏராளமான பசு மந்தைகள் இருந்தன. மன்னனிடம் பசியாற உதவி பெற்ற ஒருவனின் யோசனைபடி வல்லாள மன்னனும், அவனது மனைவியும், மகனும் சில பணியாளர்களுடன், பசு மந்தைகளுடனும் பாண்டிய நாட்டை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர். ரெட்டியார்சத்திரத்தில் அவர்கள் தங்கி, அங்கிருந்து பசுக்களைப் பாதுகாத்தனர்.
வறட்சியின் காரணமாகப் பசுக்களுக்கு உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தன. தன் பசுக்களுக்குப் புல் கிடைத்து பசி நீங்கினால், எல்லாம் வல்ல இறைவனிடம் தன் உயிரை அர்ப்பணிப்பதாக கோபிநாதன் கடவுளிடம் வேண்டினான். அடுத்த நாள் பெருமழை பெய்தது. பசுக்களுக்கு ஏராளமான புல் கிடைத்து, அவை பசியிலிருந்து தப்பித்தன. தன் சொல்லைக் காப்பாற்ற கோபிநாதன், தனது காளையின் கொம்புகளின் மீது விழுந்து இறந்தான். இதைக் கண்ட அவனது தாயும் இறந்து போனாள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அருகிலுள்ள கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஜமின்தார் வேட்டையாடு வதற்காக இந்த இடத்திற்கு வந்தார். கோபிநாதன் விட்டுச் சென்ற பசுக்கள் அந்த நிலப்பிரபுவுக்கு மான்களைப் போலத் தெரிந்தன. அவர் அவற்றை வேட்டையாட முயன்றார். அவரால் எந்த மானையும் வேட்டையாட முடியவில்லை. அவர் இது குறித்து ஒரு ஜோதிடரிடம் விசாரித்தார், அவரும் கோபிநாதனின் கதையை விளக்கினார்.
அதே இரவு, கோபிநாதன் ஒரு துறவியாக ஜமின்தார் கனவில் தோன்றி, "கண்ண பெருமானை வழிபட ஒரு கோயிலைக் கட்டி, கோயிலுக்குப் பசுக்களை அர்ப்பணியுங்கள்" என்று கூறி மறைந்தார். கன்னிவாடி ஜமீன்தார் கனவில் தோன்றி கோபிநாதர் கூறியதற்கிணங்க, மலை மீது வேப்பமரத்தடியில் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தலத்தில் கோபிநாதருக்கு நடக்கும் மூன்று கால பூஜையின்போது சேகண்டி ஒலித்து, சங்கு முழங்கும் வழக்கம் உள்ளது. சங்கு மகாலட்சுமியின் அம்சம் என்பதாலும், சுவாமியின் ஆயுதங்களில் ஒன்று என்பதாலும் இவ்வாறு செய்கின்றனர். சன்னதி முன் மண்டபத்தில் கோப்பம்மாள் காட்சி தருகிறார். பிள்ளையை விட தாய்க்கே முக்கியத்துவம் தர வேண்டுமென்பதன் அடிப்படையில்,இவரை பூஜித்த பின்பே கோபிநாதருக்கு பூஜை செய்கின்றனர்.
தாயும், பிள்ளையும் காட்சி தரும் தலம் என்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கவும், பிள்ளைகள் பெற்றோர் மீது பாசத்துடன் இருக்கவும், பெண்கள் தங்கள் புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை கிருஷ்ண ஜெயந்தி விழா நாட்களில் மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்துக்கு இறங்கி வந்து கிராமப்புறங்களில் திருஉலா சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார் இத்தல பெருமாள். இவ்வேளையில், இக்கோயிலின் உபகோயிலான கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் தங்கி, பின்னர் மலைக்கோயிலுக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்வு நடைபெறும். கொத்தப்புள்ளி கோயிலில் கோபிநாதசுவாமி தங்கியிருக்கும் நாளில் உறியடித் திருவிழா நடைபெறுகிறது.
விவசாயம் செழிக்கவும், தாம் வளர்க்கும் கால்நடைகள் நோய் நொடியின்றி நலமுடன் இருக்கவும், கோபிநாதசுவாமியை மக்கள் வழிபடுகின்றனர். தைப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் இங்கு விஷேமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு பால், தயிர், வெண்ணெய், நெய் அபிஷேகம் நடக்கிறது. மாடு வளர்ப்போர் மாடுகள் முதன் முதலில் சுரக்கும் பாலைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து, பால் சாதம் படைத்து, துளசி மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பசுக்களின் உருவ பொம்மையையும் சில பக்தர்கள் செய்து வைக்கின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையும், இம்மலையில் விளையும் தர்ப்பைப் புல்லையும் பசுக்களுக்குக் கொடுத்தால் அவை நோயின்றி வாழும் என்பது நம்பிக்கை.