பக்தனுக்காக தலைசாய்த்த பெருமாள்! கரூரின் அதிசயம் - தான்தோன்றிமலை திருத்தலம்!

venkataramana-swamy-temple
venkataramana-swamy-temple
Updated on

ரூரிலிருந்து சுமார் 4-5 கி.மீ தொலைவில் அமராவதி ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது வேங்கட ரமண சுவாமி பெருமாள் கோயில். இது பழைமையான குடைவரைத் தலம். "தென்திருப்பதி" என்று அழைக்கப்படும் இக்கோயில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலை மீது சுயம்புவாகத் தோன்றிய பெருமாள் மேற்கு நோக்கி வீற்றிருப்பது. இக்கோயிலின் ஒரு தனி சிறப்பு. பொதுவாக பெருமாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதிக்குச் சென்று வெங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க முடியாத சோமஷர்மா என்ற பக்தனுக்காக, பெருமாள் தானாகவே இங்கு வந்து எழுந்தருளினார் என்பது ஐதீகம். இதனால் இக்கோயில் தென்திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வெங்கடரமண சுவாமியை தரிசிக்கின்றனர்.

கோயிலின் கருவறை மலையின் உள்ளே 13 அடி 6 அங்குலம் நீளம், 14 அடி 6 அங்குலம் உயரம், 9 அடி 9 அங்குலம் அகலம் கொண்டது. கருவறையின் நடுவில் ஒரு உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையின் கீழ்புறம் மூலவரான அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி பாறையிலேயே புடைப்பு சிற்பமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவரின் சிலை சுமார் 10 அடி உயரத்திற்கு கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையின் மேல் மலை மீது ஒரு சிறிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்களில் பல்வேறு புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் 16 இசைக்கருவிகளை வாசிக்கும் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கது.கோயில் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், கருடாழ்வார் போன்ற உபசன்னதிகள் அமைக்கப் பட்டுள்ளன. பெருமாளுக்கு எதிரே கொடிமரம் மற்றும் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
அதிர்வுமிக்க சிலைகள் உருவாவது எப்படி? ஆகம விதிகளும் ஆச்சரிய உண்மைகளும்!
venkataramana-swamy-temple

இங்கு சுவாமியின் மார்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே இங்கு தாயாருக்கு சன்னதி கிடையாது. பெரும்பாலான பெருமாள் கோயிலில் உற்சவருக்குத்தான். திருமஞ்சனம் நடக்கும்.மூலவருக்கு குறிப்பிட்ட சில நாட்களில், மூலிகை தைலத்தால் அபிஷேகம் செய்வர். அதிலும் குடைவரைக் கோயில்களில் மூலவருக்கு அபிஷேகமே நடக்காது. இத்தலத்தில் சுவாமி குடவரை மூர்த்தியாக இருந்தாலும், தினமும் காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது. சாயரட்சை (மாலை) பூஜையில் சுவாமிக்கு உளுந்து வடை நைவேத்தியம் செய்கின்றனர். பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு மஞ்சள் மற்றும் பச்சை கற்பூரம் கலந்து துளசியுடன் வழங்கப்படும் இக்கோவிலின் தீர்த்தம் புனிதமானதாகவும், நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

ஒருசமயம் திருக்கோயில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்தது. அவர் பூஜைக்குச் செல்ல இயலாத சூழல். அவர் மகன் சிறுவன். அவனை பூஜைக்கு அனுப்பினார் அர்ச்சகர். குகைக்குள் கருவறையில் இருக்கும் பெருமாள் நல்ல உயரம். அவருக்கு தினமும் நிலை மாலை சாத்தும் பழக்கம் உண்டு. அர்ச்சகச் சிறுவனால் அந்த மாலையை சாத்த முடியவில்லை. ‘‘வெங்கடரமணா நீ சற்றே குனிந்துகொள். உனக்கு மாலை சாத்தவேண்டும்,” என்று அவன் வேண்டிக்கொள்ள பெருமாள் தலை சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டாராம். மூலவர் பெருமாள் தலை சற்றே சாய்ந்திருப்பதை இப்போதும் காணலாம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமி சன்னதி படிக்கட்டுகளில் பாதம் பொறித்து வைக்கிறார்கள். மேலும் 'செம்மாளி சமர்ப்பணம்' என்றொரு வேண்டுதலை பக்தர்கள் செய்கிறார்கள். அதன்படி சுவாமிக்கு பிரத்தியேகமாக செருப்பு ஒன்றை செய்து, அதற்கு நாமம் இட்டு,மாலை அணிவித்து ஒரு பலகையில் வைத்து, மேளதாளம் முழங்க மலையைச் சுற்றி வந்து, கோயிலில் கொடுக்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ஒரு செருப்பு மட்டும் கொண்டு வந்தாலும், இதேபோல் வேறோரு பக்தர் கொண்டு வரும் செருப்பும், ஒரே அளவில் இருப்பது இப்போதும் இங்கு நிகழும் அதிசயம். இவற்றை கோயில் வளாகத்தில் வைத்துள்ளனர்.

பக்தனுக்காக தலைசாய்த்த பெருமாள்! கரூரின் அதிசயம் - தான்தோன்றிமலை திருத்தலம்!

இது திருமண பிரார்த்தனைக்கான விசேஷ வழிபாட்டுத் தலம். நீண்ட கால திருமணத் தடை உள்ளோர் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, வேண்டிக் கொள்கின்றனர். திருமணமானதும் தம்பதியராக வந்து, உற்சவர் சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர். இதற்கென சன்னதி அருகிலேயே திருமண மண்டபம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோவில் தரிசனத்தின் மகத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்!
venkataramana-swamy-temple

இங்கு வருடத்தில் இரண்டு தேர்த்திருவிழா நடக்கிறது. ஒன்று புரட்டாசி மாதம் பெருமாளின் நட்சத்திரமான திருவோணத்தன்று, மற்றொன்று மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று. ஒரே சுவாமிக்கு வருடத்தில் இரண்டு தேர்த்திருவிழா இங்கு மட்டுமே. புரட்டாசி மாதம் இங்கு மிகவும் விசேஷமானது. புரட்டாசி மாதத்தில் 22 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். மாசி மாதத்தில் நடக்கும் தேரோட்ட விழாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com