
நாம் வீட்டில் உள்ளவர்களுக்காகவும், குடும்ப நலன் கருதியும் ஹோம தீ வளர்த்து பிரார்த்தனை செய்வது நம் முன்னோர் வழி வந்த மரபு . அப்படி செய்யும் ஒவ்வொரு ஹோமங்களும் ஒவ்வொரு பலனை தரக்கூடியவை. அவ்வாறு நடத்தப்படும் ஹோமங்களில் விதவிதமான பொருட்கள் இடப்படுகின்றன. அதுமட்டுமின்றி ஹோமத்தில் பலவிதமான சமித்துகளை (குச்சிகளை) அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். ஒவ்வொரு சமித்துகளுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு. சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வில்வம் :
வில்வகுச்சியைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் வில்வப் பழ ஹோமத்தால் சக்தி, செல்வங்களைப் பெறலாம். சிவசக்தி தொடர்பான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வக் குச்சிகளைப் பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும்.
துளசி :
துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி :
கொடிக்கள்ளி என்று கூறப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து சோமாம்ருதம் ம்ருத்யுஞ்சய மந்திரத்தால் ஹோமம் செய்தால் அனைத்து நோய்களும் நீங்கி பிரம்ம தேஜஸை பெறுவீர்கள். மேலும் கொடியின் கணுக்கால் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியில் இட்டால் காச நோய் விலகும்.
பலாச சமித்து :
இது சந்திர க்ரக சமித்து என்பதால் சந்த்ரக்ரக ஃப்ரீதியாகும். பலாச புஷ்பத்தால் நினைத்த காரியங்கள் நடக்கும். பலாச ரசத்தால் ஞான வ்ருத்தியும் சிறந்த புத்தியும் கிடைக்கும். பலாச குச்சிகளை அக்னி கோத்திரம் செய்தால் பரம ஞானம் அடைந்து பரப்ப்ரும்ம ஸ்வரூபம் அடைய முடியும்.
அரசு சமித்து :
அரசு சமித்து குரு க்ரக சமித்து என்பதால் தலைமைப் பதவி பெறலாம்.
வெள்ளை எருக்கு :
இது சூரிய க்ரகத்தின் சமித்து ஆகும். இதனால் வசியம் மோகனம் ஆகிய அஷ்டமித்துக்களை பெறலாம். மேலும் இந்த சமித்துகளால் ஸ்த்ரீ வசியம், ம்ருக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆகியவற்றை அடையலாம்.
செம்மர சமித்து :
இது அங்காரக க்ரக சமித்து என்பதால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.
நாயுருவி சமித்து :
சுதர்சன் ஹோமத்திற்குச் சிறந்தது. லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.
அத்தி சமித்து :
இது சுக்ரகிரக சமித்து, பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
தர்ப்பை சமித்து :
கேது பகவானுக்கு பிடித்த இது ஞான வ்ருத்தியைத் தரும்.
அருகம் புல் :
ராகு பகவானுக்குப் பிடித்த இதனால் கீர்த்தி புகழ் கிடைக்கும். அறிவு, அழகு, வசீகரம் உண்டாகும்.
கரும்பு :
கரும்புச் சாறு மற்றும் கரும்புத் துண்டுகள் வைத்து ஹோமம் செய்ய நல்ல வரன் கிடைக்கும்.
ஆலசமித்து :
இது யமனுக்குப் பிடித்தது, ஆயுள் நீடிக்கும்.
எள் :
எள் வைத்து ஹோமம் செய்ய பல ஜென்ம பாபம் தீரும் கடன் தொல்லையும் தீரும்.
சந்தன மரம் :
இந்த சமித்தால் ஹோமம் செய்ய சர்வ பாபம் விலகி லட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.
நவதான்யங்கள் :
கிரக தோஷங்கள் விலகும்.
மஞ்சள் :
இதை வைத்து ஹோமம் செய்தால் வியாதிகள் நீங்கும். கல்விசெல்வம் கிடைக்கும்.
வேங்கை மரம் :
இந்த சமித்தினால் ஹோமம் செய்ய பில்லி சூன்யம் யாவும் ஒழியும்.