அறுபடை வீடு என்றதும் அது முருகப்பெருமானுக்கு மட்டுமே உள்ளது என்று நினைத்திருப்போம். ஆனால் அறுப்படை வீடு விநாயகருக்கும் உள்ளது என்பதை அறிவீர்களா? முருகப்பெருமானின் அறுபடை வீட்டை உலகமே அறியும். ஆனால் விநாயக பெருமானின் அறுபடை வீட்டை பற்றி சிலருக்கே தெரியும். இந்த பதிவின் மூலம் அனைவரும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
1. முதல் படைவீடு: அல்லல் போம் விநாயகர்.
மக்களின் துன்பத்தை போக்கக்கூடிய விநயாக பெருமானாக எழுந்தருளியிருக்கிறார். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்குள்ளே தான் இருக்கிறார் இந்த அல்லல்போம் விநாயகர். ‘அல்லல்போம் வல்வினைப்போம்’ என்று ஔவையார் பாடியதை வைத்தே இந்த பிள்ளையாரின் சிறப்பை புரிந்துக்கொள்ள முடியும்.
2.இரண்டாவது படைவீடு: ஆழத்து விநாயகர்.
விருதாச்சலத்தில் எழுந்தருளி அருள்புரிகிறார் இந்த ஆழத்து விநாயகர். இவரே இரண்டாவது படை வீட்டிற்கு சொந்தக்காரர். ஆழத்து பிள்ளையார் 18 அடி ஆழத்தில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இவரை காண 18அடி ஆழம் இறங்கி செல்ல வேண்டும். விருதகிரீஸ்வரர் என்று சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலில் தான் இந்த விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கினால் ஞானத்தையும், செல்வத்தையும், கல்வியையும் சேர்த்து தருவார்.
‘ஞானத்தையும் கல்வியையும் நயந்து தந்த ஆழத்து விநாயகர்’ என்ற பெயரோடு எழுந்தருளும் இந்த விநாயகர் இரண்டாவது படைவீடாகும்.
3. மூன்றாவது படைவீடு: திருக்கடவூரில் இருக்கும் விநாயகர்.
திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தான் இந்த பிள்ளையார் காட்சித்தருகிறார். இந்த விநாயகரின் பெயர் கல்ல வாரண விநாயகர். அமிர்த கலசம் கிடைத்தபோது அதை தேவர்களிடமிருந்து ஒளித்து வைத்து விளையாடி திருவிளையாடல் புரிந்ததால், இவருக்கு கல்ல வாரண விநாயகர் என்று பெயர் வந்தது. இவரை வணங்குவதால் ஆயுள் பலம் அதிகரிக்கிறது.
4. நான்காவது படைவீடு: சித்தி விநாயகர்.
மதுரை என்றாலே மீனாட்சியம்மன்தான். மதுரையில் அம்மன் சன்னதிக்குள் நுழையும் போதே வழியிலேயே காட்சித்தருகிறார் இந்த சித்தி விநாகர். நம் மனதில் நினைத்த எல்லா காரியங்களையும் அப்படியே நிறைவேற்றி கொடுக்கக்கூடியவர். மாணிக்கவாசகர் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சென்றார், அவ்வாறே நடந்தது. எனவே இந்த சித்தி விநாயகரை வணங்கினால் காரியங்களில் சித்தி கிடைக்கும்.
5. ஐந்தாவது படைவீடு: துண்டிராஜா கணபதி, கற்பக விநாயகர்.
காசி மாநகரில் அமைந்திருக்கும் தூண்டி ராஜா கணபதி. இவரை துண்டி மஹாராஜ், தீட்சா கணபதி என்றும் அழைக்கிறார்கள். காசியிலே எல்லா தெய்வங்களையும் வணங்க தொடங்கும் முன்பு இவரை வணங்க வேண்டும். இவரை வணங்கினால் ஞானம் கிடைக்கும். ஆனால் எல்லோராலும் காசி சென்றுவிட முடியாது என்ற காரணத்தினால் அதற்கு இணையான கோவிலாக பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கருதப்படுகிறது. எனவே ஐந்தாவது படைவீட்டில் இரண்டு கோவில்கள் உள்ளது, ஒன்று துண்டிராஜா கணபதி, இன்னொன்று கற்பகவிநாயகர்.
கற்பகவிநாயகர் தன்னுடைய தந்தையான சிவபெருமானை வணங்கும் ரூபத்திலேயே எழுந்தருளி அருள்புரிகிறார். தந்தையை வழிப்படும் புதல்வன் என்னும் ஞானத்தை உலகிற்கு உணர்த்தும் ஞானகுருவாகவும் காட்சித்தருகிறார். எனவே கற்பக விநாயகரை வணங்கினால் நினைத்தது நடக்கும், ஞானமும் கிடைக்கும்.
6. ஆறாவது படைவீடு: திருநாரையூர்.
திருநாரையூரில் சௌந்தரேஸ்வரர் என்னும் ஆலயத்திலேயே ஆறாவது பிள்ளையாரான பொள்ளாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். பொள்ளாப் பிள்ளையார் என்றால் உளிக்கொண்டு செதுக்கப்படாதவர் என்று பொருள். இவர் சுயம்புவாக தோன்றிய பிள்ளையார் ஆவார். புதிதாக காரியம் செய்ய துவங்கும் முன் இந்த பொள்ளாப்பிள்ளையாரை வணங்கினால் அந்த காரியம் கைக்கூடும். நம்பியாண்டர் நம்பி மூலமாக ராஜ ராஜ சோழன் தேவாரம், திருவாசகம் அனைத்தையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற புது முயற்சியை மேற்க்கொண்டார். அதற்கு இந்த பொள்ளாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டே தொடங்கினார். அப்படிப்பட்ட புதிய முயற்சிக்கு வெற்றியை பெற்று தந்தவர் இந்த பிள்ளையார்.
இப்படி ஆறுபடை வீடுகளிலும் ஆறு பலன்களை பக்தர்களுக்கு தந்து விநாயகர் எழுந்தருளி காட்சித்தருகிறார். எனவே விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று அவரை தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.