
கருடனுக்குக் கருடாழ்வார் என்ற பெயருண்டு. இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?
கிருதயுகத்தில் அஹோபிலத்தைக் கொடுங்கோலனாக ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்யகசிபுவை அழித்துத் தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த தோற்றம், மனிதன் மற்றும் சிங்க உருவிலான நரசிம்மத் தோற்றமாகும். பிரகலாதனைக் காக்க இறைவன் நரசிம்ம மூர்த்தியாக இரண்யன் அரண்மணைத் தூணிலிருந்து தோற்றம் பெற்றதால், அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்துத் தனியாக வர வேண்டியதாயிற்று. இது பற்றி அறிந்த கருடன் மிகவும் துயரமடைந்து, இறைவனிடம் தனக்கு நரசிம்மத் தோற்றக் காட்சியைக் காட்டி அருளும்படி வேண்டினார். இறைவன் கருடனை அகோபிலம் சென்று தவமியற்றும்படி கூறி, தான் அங்கேயே நரசிம்மர் தோற்றத்தில் காட்சி தருவதாக உறுதியளித்தார். கருடனும் அகோபிலம் சென்று தவமியற்ற, இறைவன் அங்கிருந்த மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் அவருக்குக் காட்சியளித்தார். மாறாத பக்தி கொண்டு இறைவனின் சேவையே பெரிது என்று அவரிடம் முழுமையாகச் சரணடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகிறார்.
கருடாழ்வாரை ‘பெரிய திருவடி’ என்று அழைப்பது ஏனென்று தெரியுமா?
வைணவச் சமய ஈடுபாடுடையவர்கள், கருடனைப் பெரிய திருவடி என்றும், அனுமனைச் சிறிய திருவடி என்றும் அழைப்பதுண்டு. கருடனின் வலிமையைக் கண்ட இறைவன் விஷ்ணு, கருடனைத் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக் கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது, அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால் ‘திருவடி’ என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. கருடன்தான் இறைவன் விஷ்ணுவின் முதன்மை வாகனம் என்பதால், கருடன் பெரிய திருவடியாகிறார். அதன் பிறகு, இராமாயண காலத்தில் இறைவனுக்கு அனுமன் வாகனமாக இருந்ததால், அனுமன் ‘சிறிய திருவடி’ எனப்படுகிறார்.