

மார்கழியின் பனியும் குளிரும் மறைந்து சூரியன் புதிய பாதையில் பயணிப்பதை வரவேற்கும் நாள், பொங்கலுக்கு முதல் நாளான போகி பண்டிகை. இது பழையனவற்றைப் போக்கி, இல்லத்தைப் புதியதாக்கும் நாள். பழையவற்றையும், பயன்படாததையும் வெளியில் போடும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. போகியன்று தேவையற்றவை அகற்றப்பட்டு வீடு தூய்மையாக்கப்படும். வீட்டை சுத்தம் செய்து புது வர்ணம் பூசி, அலங்காரம் செய்வது, வீட்டின் கூரையில் காப்புக் கட்டுவார்கள். மாவிலை தோரணங்கள் வாயிலை அலங்கரிக்கும், வீதியெங்கும் அழகான கோலங்கள் போடுவது என ஊரே உற்சாகமாக இயங்கும்.
துன்பங்கள் வெளியேற்றப்படும் நாளை ‘போக்கி’ என்றனர். இது காலப்போக்கில் ‘போகி’ என்று மாறிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசி நாள் என்பதால் நடந்த நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்றும் கூறுவர்.
‘போகி' என்ற சொல்லுக்கு, ‘இன்பங்களை அனுபவிப்பவர்’ என்று பொருள். இந்திரனை 'போகி' என்று கூறுவதுண்டு. பொங்கலுக்கு முதல் நாளான போகியன்று இந்திரன் என்ற மழைத்தேவனை வேண்டிக்கொள்வதும், அறுசுவை உணவை உண்டு மகிழ்வதும் நமது முன்னோர்கள் வழக்கம்.
போகி பற்றிய புராணக்கதை ஒன்று சொல்லப்படுவதும் உண்டு. ஒரு காலத்தில் தெய்வங்களின் அரசனாக இந்திரனை மக்கள் கும்பிட்டு வந்தனர். இப்படி வணங்கி வந்தது இந்திரனுக்கு தலைகணத்தை உண்டாக்கியது. கிருஷ்ணருக்கு இது தெரிய வந்ததும், இந்திரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினார்.
கிருஷ்ணரும் மாடுகளை மேய்க்கும் நண்பர்களும் இனி இந்திரனை வணங்கக் கூடாது என்று கூறினர். இதனால் இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஆகையால், புயல் மழையை உண்டாக்கினான். தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க கோவர்த்தன மலையை தனது சுண்டு விரலால் தூக்கி நின்றார் கிருஷ்ணர்.
மூன்று நாட்கள் பெய்தது மழை. தனது தவறை உணர்ந்தான் இந்திரன். கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டான். அன்று முதல் இந்திரனை போற்றும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாட கிருஷ்ணர் இசைவு அளித்தார். இது இந்திரனின் இன்னொரு பெயரைக் கொண்டுள்ள பண்டிகையாகும்.
போகி பண்டிகையின் தாத்பர்யம் இல்லத்தின் அழகு மட்டுமல்ல, நம் மனதில் இருக்கும் அசுத்தங்களையும் அகற்றி மனம் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதும்தான். மனம் எனும் வீட்டில் நல்லனவற்றை சிந்திப்பதே வண்ணக் கோலமும், தோரணமும் ஆகும். அன்பு, தூய்மை, வாய்மை, ஒழுக்கம் போன்ற நற்குணங்கள் அரிசி, வெல்லம், நெய், பருப்பு போன்றவற்றைக் குறிக்கிறது. இவற்றால் சர்க்கரை பொங்கல் செய்து கடவுளுக்குப் படையல் செய்து இறையருள் பெற வேண்டும் என்பதே போகி பண்டிகையின் தாத்பர்யம்.
பொங்கலன்று காலை நேர சூரிய பூஜை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இரவு நேர பூஜையும் முக்கியம். அன்று இரவு முன்னோர்களை வழிபட வேண்டும். ஒரு தலைவாழை இலையை குத்துவிளக்கின் முன் விரித்து, அதில் பலகாரங்கள், வெற்றிலைப் பாக்கு, பழம் மற்றும் புத்தாடைகள் வைக்க வேண்டும். முன்னோர்களை மனதார வணங்கி, ஆடைகளை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும்.