

‘தர்மம் தலை காக்கும்’ என்று சொல்வதுண்டு. நாம் தர்மம் செய்வதன் மூலம் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். அதிலும் வாயில்லாத ஜீவன்களான பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். முக்கியமாக, நம் கர்ம வினைகள் நீங்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தெந்த விலங்குகளுக்கு, பறவைகளுக்கு உணவளித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்பதிவில் காண்போம்.
ஆமைகளுக்கு உணவளித்து வந்தால் செல்வச் செழிப்பு பெருகும். காகங்களுக்கு உணவளித்தால் வாழ்வில் கஷ்டங்கள், துன்பங்கள் வராது. நம் முன்னோர்களின் ஆசி கிட்டும் என்று சொல்லப்படுகிறது. குரங்குகளுக்கு உணவளித்து வந்தால் அகால மரணம் நேராது. நாய்களுக்கு உணவளிப்பதால் நவகிரக தோஷம் நீங்கும், நம் வாழ்வில் உண்டாகும் தடைகளும் துன்பங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. பசுக்களுக்கு உணவளிப்பதால் கடவுளின் அருள் உண்டாகும். நம்முடைய கர்மவினை நீங்கி, செல்வச் செழிப்பு பெருகும். மீன்களுக்கு உணவு அளிப்பதால் சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கும்.
புறாக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பூர்வ ஜன்ம சாபம் நீங்கி செல்வச் செழிப்பைப் பெற முடியும். கிளிகளுக்கு உணவு அளிப்பதன் மூலம் நமக்கு நல்ல ஞானம், படிப்பு, புத்திக் கூர்மை வளரும் என்று சொல்லப்படுகிறது. மயில்களுக்கு தானியங்களை உணவாக அளிப்பதால் காம குற்றங்களில் இருந்து விடுபடலாம். மைனாவிற்கு உணவளித்தால் குடும்பத்தில் தம்பதியரிடையே ஏற்படும் மன வேற்றுமை நீங்கும். அணில்களுக்கு உணவளிப்பதன் மூலம் காதலில் வெற்றி கிட்டும்.
எறும்புகளுக்கு உணவளிப்பதன் மூவமாக கர்ம வினை, சாப பாபங்கள் தீரும். எருமைக்கு உணவளிப்பதால் அகால மரணம், துர்மரணம், நோய் ஏற்பட்டு மரணம் போன்றவை ஏற்படாமல் காக்கும். குதிரைகளுக்குத் தொடர்ந்து உணவு அளித்து வருவதன் மூலம் நம்மை நல்ல செல்வச் செழிப்புடன் வைக்கும், ராஜ வாழ்க்கையைத் தரும், அரசியலில் நல்ல வெற்றியையும் தரும்.
யானைகளுக்கு உணவு அளிப்பதன் மூலம் பதினாறு வகை செல்வங்களையும், ராஜபோக வாழ்க்கையும், அரசியலில் நல்ல வெற்றியையும் தரும் என்று சொல்லப்படுகிறது. திருமணத் தடை இருப்பவர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்தால் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். கழுதைகளுக்கு உணவளிப்பதன் மூலம் நியாயமாக கிடைக்க வேண்டிய செல்வம் கிடைக்கும். நல்ல வழியில் செல்வம் கிடைக்கும். கடுமையான சரும நோய்களின் வீர்யம் குறையும். சரும நோய்கள் தீரும் என்று சொல்லப்படுகிறது.
எந்தெந்த விலங்குகளுக்கு உணவு அளித்தால் கிரக தோஷங்கள் நீங்கும்:
சூரியன்: குதிரைக்கு உணவு அளிப்பதன் மூலம் சூரிய பகவானால் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
வியாழன்: மாடுகளுக்கு தீவனமும் யானைகளுக்கு உணவும் அளிக்க கல்விப் பிரச்னை நீங்கும். கல்விக்கு அதிபதி வியாழன்.
சந்திரன்: சந்திரன் பார்வை உக்ரமாக இருந்தால் மீன், ஆமை போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிக்கலாம்.
செவ்வாய்: ஆடு, செம்மறியாடு மற்றும் குரங்குகளுக்கு உணவு கொடுக்க, வாழ்வின் தடைகள் நீங்கும்.
புதன்: சிறந்த பேச்சாளராக கிளிகளுக்கு உணவு தர வேண்டும்.
சுக்ரன்: செல்வத்தை அள்ளித்தரும் கிரகம் சுக்ரன், புறாக்களுக்கு தானியம் கொடுக்க செல்வம் அதிகரிக்கும்.
சனி: சனி பகவானின் அருள் பெற எருமை, கருப்பு நாய், காகம் ஆகியவற்றுக்கு உணவு அளிக்கலாம்.
ராகு கேது: ஜாதகத்தில் ராகு, கேது வலு பெற நாய்களுக்கு ரொட்டி, எறும்புகளுக்கு சீனி கொடுக்க நல்ல பலன் உண்டு.