
சகல சௌபாக்கியங்களையும் தந்தருளும் தாயாராக விளங்குகிறாள் மகாலக்ஷ்மி தேவி. மகாலக்ஷ்மியை அஷ்ட லக்ஷ்மிகளாக பாவித்து வழிபடுவது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அஷ்ட லக்ஷ்மிகளும் நம் உடலிலேயே வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆதிலக்ஷ்மி: நம் பாதங்களில் ஆதிலக்ஷ்மி வசிக்கிறாள். கிருஷ்ண பரமாத்மா குழந்தையாக இருந்தபோது தனது கால் கட்டை விரலை சூப்பினார். அப்படிச் செய்வதன் மூலமாக ஆதிலக்ஷ்மிக்கு முத்தம் தருகிறான். அதனால் பிறர் மீது நம் கால் பட்டாலோ, மது, மங்கை, சூதாட்டம் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டாலோ இவள் விலகி விடுவாள் என்பது ஐதீகம்.
கஜலக்ஷ்மி: மனிதனுடைய முழங்காலில் கஜலக்ஷ்மி வசிக்கிறாள். காலை நீட்டிக் கொண்டு புத்தகம் படிப்பதாலும், அரிசி போன்ற தானியங்களை மிதிப்பதாலும், பசுவின் கால்களைக் கட்டி பால் கறப்பதாலோ இவள் நம்மை விட்டு விலகுவாள். இதற்குப் பரிகாரமாக பெரியவர்களின் முழங்கால்களை வலி தீர பிடித்து விடுவதால் திரும்பி இந்த லக்ஷ்மி நம்மிடம் குடியேறுவாள்.
வீர்யலக்ஷ்மி: இடுப்புக்குக் கீழ் பகுதியில் வீர்யலக்ஷ்மி உள்ளாள். குடுமி வைத்தவர்களை கேலி செய்தால் அச்சாபத்தினால் கேலி செய்தவர்களுக்கு படிப்பு ஏறாது. சாதுக்களை கேலி செய்தால் வீர்யலக்ஷ்மி அவர்களிடம் இருந்து விலகி விடுவாள்.
விஜயலக்ஷ்மி: இவள் நமது இடது தொடையில் வசிக்கிறாள். தனது மனைவியை விடுத்து பிறர் மனைவியை நாடும்போது இவள் அகன்று விடுவாள். பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் எல்லாம் இழந்து திரௌபதியை பணயம் வைக்க, துரியோதனன் அவளை தனது இடது மடியில் அமரச் சொன்னான். அதனால் விஜயலக்ஷ்மி அவனை விட்டு விலகிச் சென்றாள். அவன் போரில் தோற்றான்.
சந்தானலக்ஷ்மி: மனிதனின் வலது தொடையில் இத்தேவி வசிக்கிறாள். திருமணம் செய்யும்போது பெண்ணை தானம் கொடுக்கும் சமயம் அவளை வலது தொடையில் அமர்த்திக்கொள்ள வேண்டும். மாற்றி தானம் செய்தால் சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள்.
தான்யலக்ஷ்மி: இவள் மனிதனின் வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள். ஊசிப்போன மற்றும் எச்சில் உணவுகளை ஏழைகளுக்கு பெண்கள் அளித்தால் தான்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுவாள். பொதுவாக, மற்றவர்கள் வயிற்றில் நாம் அடிக்கும்போது தான்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுவாள்.
தைரியலக்ஷ்மி: நமது நெஞ்சுப் பகுதியில் இவள் வசிக்கிறாள். நெஞ்சில் நஞ்சை வைத்து பொய்யும் புறமும் பேசித் திரிபவரை விட்டு தைரியலக்ஷ்மி விலகுகிறாள். பெண்களுக்கு நெஞ்சில் மாங்கல்யம் தவழ்வது கணவனுடைய தைரியத்தை வளர்க்கும்.
வித்யாலக்ஷ்மி: இத்தேவி நம் கழுத்துப் பகுதியில் வசிக்கிறாள். பொதுவாக, ருத்ராக்ஷை அணிய வேண்டும். அப்படி அணியவில்லை என்றாள் வித்யாலக்ஷ்மி நம்மை விட்டு விலகி விடுவதாக ஐதீகம்.