
கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பொன்மலை வேலாயுத சுவாமி கோயில், முருகப் பெருமானின் திருத்தலங்களுள் முக்கியத்துவம் பெற்ற கோயிலாகப் போற்றப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் உள்ள பொன்மலையில், முருகப்பெருமான் தனது பாதங்களைப் பதித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இங்கே மூலஸ்தானத்தில் இருக்கும் முருகனுக்கு பூஜை நடக்கும் முன்பு, பாறையில் உள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. இங்கு ஆடிக் கிருத்திகை திருநாள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில். மற்ற கோயில்களைப் போல மதிய வேளையில் நடை சாத்தப்படாததுதான் இங்கு சிறப்பு. காலை 6 முதல் இரவு 8 மணி வரை இக்கோயில் நடை திறந்தே இருக்கும். இத்தல முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது சிறப்பம்சம்.
இங்கு மூன்று அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றிய பலி பீடமே மூலஸ்தனமாக இருக்கின்றது. இந்த பலி பீடத்திற்கு கீழ்ப்பகுதியில் முருகனது உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் ஒன்று உள்ளது. இங்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் எல்லாம் முருகப்பெருமானுக்கு நடைபெறுகிறது. இத்தல முருகப்பெருமான் தனது பக்தர்களுக்கு, நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்வதாக ஐதீகம். இதற்காக இத்தலத்தில், ‘பிராது கட்டுதல்’ என்று ஒரு வழிபாடு இருக்கிறது. அதாவது, தனது கோரிக்கையை தாளில் எழுதி கட்டி வர கோயில் பிராகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சன்னிதி அருகே ஒரு இடமும் இருக்கிறது. இங்கு ஆடி கிருத்திகை விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை வழிபடுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் தோவாளை மலை மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள்புரிகின்றனர். 108 படிகள் ஏறிச்சென்றால் குமரன் கோயிலை அடையலாம். இரண்டு பிராகாரங்களைக் கொண்ட சிறிய கோயிலில் குமரன் நான்கு கைகளுடன் மயில் மீது நின்றருளுகின்றான். இக்கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்குச் சிறப்புப் புஷ்பாபிஷேகம் நடைபெறும். அன்று இங்குள்ள முருகனுக்கு கூடை கூடையாக மலர்களைக் கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதனை, ‘ஆடி மலர் முழுக்கு’ என்பர். தோவளை பகுதி மலர்களுக்கு பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி சன்னிதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர், சின் முத்திரையுடன், கண் மூடி நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. திக்குவாய் உள்ளவர்கள் இந்த முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி கிருத்திகை இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி கிருத்திகை விசேஷமாகக் கொண்டாடப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் பெருமானின் நெஞ்சில் பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இது அசுரனோடு போர் புரிந்ததன் காரணமாக ஏற்பட்ட வடு. இது முருகன் கோபம் தணிந்த தலம். ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உத்ஸவர் சன்னிதியாக உள்ளது.
ஆடி கிருத்திகை விசேஷமாகக் கொண்டாடப்படும் திருப்போரூா் கந்தசுவாமி கோயில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம் இது. சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சன்னிதியில் இருந்து பார்த்தால், முன்னே தரிசித்துச் செல்பவர்களைப் பார்க்க முடியாதபடி இச்சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இல்லாத சிறப்பாக வட்ட வடிவ மண்டபம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பலி பீடத்தின் முன்புறம் செய்யும் பிரார்த்தனையில் ஒன்றாக உப்பு, மிளகு போன்றவற்றை பக்தர்கள் கந்த பெருமானுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். கந்தபெருமான் இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீ சுப்பிரமணியர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன. சிவனைப் போல இங்கு ஐப்பசி பௌர்ணமியில் முருகனுக்கு அன்னாபிஷேகமும், சிவராத்திரியன்று இரவில் நான்கு கால பூஜையும் நடைபெறுகிறது.
ஈரோட்டிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் முருகன் திருநாமம் தண்டாயுதபாணி. இங்கு மட்டுமே இறைவன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்), 12 கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கந்த சஷ்டி கவசப் பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும். இங்கு மட்டுமே வேங்கை மரத் தேர் உள்ளது. இங்கு முருகருக்கு அபிஷேகம் செய்யும்பொழுது அந்த தயிர் புளிப்பது இல்லை. ஆடி கிருத்திகை அன்று அன்னதானம், பால் குடம் எடுத்தல் போன்றவற்றை பக்தர்கள் செய்கின்றனர்.