இடது கையால் பிறருக்கு தானம் செய்வது முறையா?
சிலர் தானம் வழங்கும்போது, ‘இடது கையால் தரக்கூடாது’ என்று கூறுவார்கள். ஆனால், தானம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு வலது கையாக இருந்தால் என்ன? இடது கையாக இருந்தால் என்ன? நாம் செய்யும் தானத்திற்கே மதிப்பல்லவா? இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு நாள் கர்ணன் எண்ணெய் குளியலுக்காக தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்து தனது உடலில் தேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது யாசகம் கேட்டு ஒருவர் வந்தார். அப்போது சற்றும் யோசிக்காமல் இடது கையாலேயே இடதுபக்கம் இருந்த தங்கக் கிண்ணத்தை எடுத்து அவரிடம் எடுத்துக் கொடுத்தான் கர்ணன்.
யாசகம் கேட்டு வந்தவர் அதை வாங்கிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக சென்றார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கர்ணனின் நண்பர் ஒருவர், “இடது கையால் தானம் வழங்கக் கூடாது. அது அறத்திற்கு புறம்பானது. இது உங்களுக்கும் தெரியும்தானே? பிறகு ஏன் அறத்திற்கு எதிராக இடது கையால் தானம் வழங்கினீர்கள். வலது கையால்தானே கொடுத்திருக்க வேண்டும்” என்று கேட்டார்.
இதைக்கேட்ட கர்ணன், “நண்பா! அதை நானும் அறிவேன். ஆனால், மனித மனம் நிலையில்லாதது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டேயிருப்பது. இடதுப் பக்கத்தில் இருக்கும் தங்கக் கிண்ணத்தை தர்மத்தின்படி வலதுக் கையால் எடுக்க சில நொடிகள் தாமதம் ஆகலாம். ஆனால், அந்த சில நொடிகளுக்குள் மனம் மாறிவிடலாம். ‘இவ்வளவு விலையுயர்ந்த கிண்ணத்தை தானமாகத் தரலாமா?’ என்று மனம் பகுத்தறிவை பேசத்தொடங்கிவிட்டால் என்ன செய்வது? என்னுடைய கொடை தவறிப்போக வாய்ப்புகள் உள்ளது. அதனால்தான் இடது கையில் அதை அளித்தேன்” என்றான் கர்ணன்.
இதைக்கேட்ட அந்த நண்பர், கர்ணனின் ஈகைப் பண்பை எண்ணி வியந்தார். கர்ணன் இறக்கும் தருவாயில் கூட கண்ணனிடம், ‘தனக்கு முக்தி வேண்டாம் என்றும் எத்தனை ஜன்மம் எடுத்தாலும், உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மனம் வேண்டும்’ என்றுதான் கேட்டான் கர்ணன்.
இந்தக் கதையில் சொன்னதுப் போல, இடது கையாக இருந்தாலும் சரி, வலது கையாக இருந்தாலும் சரி பிறருக்கு தானம் வழங்க வேண்டும் என்ற மனம் நமக்கு இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.