குளவிகள் கூடு கட்டுவது இயற்கையான விஷயம் என்றாலுமே, எல்லோர் வீட்டிலேயும் வந்து குளவி கூடு கட்டிவிடாது. குளவி எந்த வீட்டிலாவது கூடு கட்டினால், அந்த வீட்டில் குழந்தைப் பேறு உண்டாகப்போகிறது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இது உண்மைதானா? இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வீட்டில் குளவி கூடு கட்டுவதால் நன்மையான விஷயங்களே ஏற்படும். குளவி வீட்டில் கூடு கட்டினால் அந்த வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் வந்து விட்டதாகப் பொருள். வீட்டில் குளவி கூடு கட்டுவதால், நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதாரப் பிரச்னை தீரும் என்று சொல்லப்படுகிறது. செங்குளவி வீட்டில் கூடு கட்டினால், சாதாரண தொழிலாளியாக இருப்பவர்கள் கூட முதலாளியாகக் கூடிய யோகம் கிடைக்குமாம். குளவி கூடு கட்டிய வீட்டில் கல்யாணமான தம்பதியர் இருந்தால், விரைவில் அவர்களுக்கு குழந்தைப் பிறக்கப்போவதாகப் பொருள்.
குளவி கூடு கட்டியது செம்மண் நிறத்தில் இருந்தால், அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்று சொல்வார்கள். இதுவே, செம்மண் அல்லாத வேறு நிறங்களில் குளவிக்கூடு இருந்தால், பெண் குழந்தைப் பிறக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
குளவிக்கூட்டை கலைப்பது என்பது பாவச் செயல் ஆகும். இருப்பினும், சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் கைக்கு எட்டும் தொலைவில் குளவி கூடு கட்டிவிட்டால், அதை கலைத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படிக் கலைத்த பிறகு அந்த இடத்தில் சிறிது கோமியத்தை இட்டு விடுவது நல்லது. இதனால், குளவி திரும்பவும் அந்த இடத்தில் வந்து கூடு கட்டாது.
குளவி கூடு கட்டுவதற்கு கால் படாத இடத்தில் இருக்கும் மண்ணைத்தான் எடுத்து வரும். அந்த மண்ணில் கற்பக சக்தி உள்ளதாகவும், அதை தினந்தோறும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டால், பொருளாதார சூழ்நிலை மேலோங்கும் என்றும் சொல்லப்படுகிறது. குளவி அதன் கூட்டில் சிறிது காலமே இருக்கும். அதன் பிறகு அது கூட்டை விட்டு சென்றதும் அந்த குளவிக்கூட்டை நன்றாக பொடியாக்கி விபூதியில் சேர்த்து கலந்து நெற்றியில் இட்டு வருவதால், கண் திருஷ்டி நீங்கும் என்று சொல்லப்படுகிறது.