கனவுகள் என்பது எதிர்காலத்தை முன்கூட்டியே நமக்குத் தெரிவிக்கக்கூடிய குறிப்பாகும். பலருக்கு அது வெறும் கனவாக முடிந்துவிடும். ஆனால், வெகுசிலருக்கு அவர்கள் கண்ட கனவு நிஜத்திலும் அப்படியே பலிக்கும் என்று சொல்வார்கள். அத்தகைய நபர்கள் தெய்வ சக்தி கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.
காலை 4:30 முதல் 5:30 மணிக்குள் வரும் கனவுகள் வருங்காலத்தை சொல்லக்கூடிய எச்சரிக்கை என்று சொல்லப்படுகிறது. இத்தகைய தெய்வ சக்தி கொண்டவர்களுக்கு வரும் கனவுகளும் அதன் பலன்களும் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக, தூக்கத்தின்போதுதான் நம்முடைய ஆழ்மனதுடன் நாம் தொடர்புடன் இருப்போம். அப்போது நம் ஆழ்மனது கனவுகள் மூலம் நமக்குத் தெரிவிக்கும் விஷயங்கள் உண்மையாக இருக்கும். கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்கள் காணும் கனவுகள் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது. சிலருக்கு கனவில் கோயில்கள் அடிக்கடி வரும். அந்தக் கோயிலுக்கு நீங்கள் போயிருக்கலாம். அல்லது இதுவரை போகாமல் கூட இருக்கலாம். அப்படி இது போன்ற கனவு வந்தால் உங்களுக்கு தெய்வசக்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கனவில் வந்த அந்த கோயிலுக்குச் சென்று வரவேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆலயத்தின் கதவு மூடியிருந்தால் அல்லது ஆலயத்தில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றால் கடவுள் உங்களை சோதிக்கப் போகிறார் அல்லது உங்களிடம் உள்ள தெய்வத்தன்மை குறைய போகிறது என்று அர்த்தம்.
சிலருக்கு கனவில் அம்பு, வில், காளை மாடு, வேல், மயில், விபூதி, குங்குமம், வேப்பிலை, எலுமிச்சை, சூலம் போன்ற கடவுள் சம்பந்தமான பொருட்கள் வந்தால், அந்தக் குறிப்பிட்ட கடவுளின் அனுகிரகம் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம்.
சிலருக்கு அவர்கள் வீட்டிலே வாழ்ந்து இறந்தவர்கள் கனவில் வருவார்கள். அவ்வாறு நடந்தால், அவர்களின் பரிபூரண ஆசிர்வாதமும், துணையும் உங்களுக்கு இருப்பதாகப் பொருள்.
சிலருக்கு மயானம், ஆக்ரோஷமான உயிரினங்கள் கனவில் வரும். அதுபோல கனவு வந்தால், உக்கிரமான தெய்வங்களான காளி, வாராகி அம்மன், உக்கிரமான ஆண் தெய்வங்கள் துணையாக இருப்பதாக அர்த்தம்.
கோயிலுக்குள் செல்வது போல கனவு கண்டால், நீங்கள் மனதில் நினைத்த காரியம் இறைவன் அருளோடு பரிபூரணமாக நடக்கப்போகிறது என்று அர்த்தம். கோயில்களில் நடைபெறும் விழாக்களில் ஈடுபடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு தெய்வத்தன்மை வரப்போவதாகப் பொருள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் உருவில் தெய்வம் வந்து கனவில் காட்சி தந்தால் தெய்வத்தன்மை உங்களுக்கு இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும்போது சாமியிடமிருந்து பூ கீழே விழுவது, மணி அடிக்கும் ஓசை, யாரேனும் நபர் வந்து உங்களிடம் நல்ல விஷயங்களைச் சொல்வது போல கனவு வந்தால், கடவுளே அதை வந்து உங்களிடம் சொல்வதாக அர்த்தம். இந்தக் கனவுகளில் உங்களுக்கு ஏதேனும் வந்திருக்கிறதா? என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.