

ஐப்பசி பௌர்ணமி நன்னாள் மிகச் சிறப்பு வாய்ந்தது, பல நன்மைகளை அள்ளித் தரும் திருநாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் வழிபாடுகள் செல்வச் செழிப்பை அதிகப்படுத்தும் என்பது நம்பிக்கை. ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு வருடத்திற்கு ஒருமுறை அன்னாபிஷேகம் நடத்தப்படுவது அனைவருக்கும் தெரியும். சிவபெருமானே உலக உயிர்களுக்கும் தந்தையாக திகழ்வதால் இந்த நாளில் லிங்க மேனி முழுவதும் அன்னத்தால் மூடி அபிஷேகம் செய்கிறார்கள்.
இந்த நாளில் சந்திரன் சாபம் நீங்கி முழு பிரகாசத்துடன் காட்சி தருகிறார். சிவனுக்கு மட்டுமன்றி, இந்த நாள் முருகப் பெருமானுக்கும் உகந்ததாகும். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு இரண்டு பொருட்கள் வாங்கிப் படைத்து வழிபடுவதால் செல்வச் செழிப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
பிள்ளைப் பேறு, திருமணம், வேலை வாய்ப்பு, நோய்கள் நீங்க வாழ்வில் உயர்ந்த உன்னத நிலையைப் பெற இந்த நாளில் இரண்டு பொருட்கள் வாங்க வேண்டும். ஐப்பசி பௌர்ணமி தினத்தில் குளிகை நேரத்தில் பனங்கற்கண்டு, சுக்கு அல்லது வசம்பு ஆகியவற்றை வாங்கி முருகனுக்குப் படைத்து வழிபடுவதால் நம்முடைய வாழ்வில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் கரைந்து போய்விடும் என சொல்லப்படுகிறது.
‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்பார்கள். அப்படிப்பட்ட சுக்கை முருகனுக்குப் படைத்து வழிபடுவது சிறப்பாகும். பனங்கற்கண்டிற்கு மருத்துவ குணம் மட்டுமல்ல, அளவில்லாத நன்மைகள் தரும் குணமும் உண்டு.
எமகண்டம், ராகு கால நேரத்தில் சுப காரியங்களைத் தவிர்ப்பார்கள். ஆனால், குளிகை காலத்தில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அது மறுபடியும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது ஐதீகம். இதனால் சுப நிகழ்ச்சி, நகைகள் வாங்க பலரும் குளிகை நேரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
முருகப்பெருமானின் அருள் கிடைக்கவும், நன்மைகள் அதிகரிக்கவும், செல்வங்கள் பெருகிக்கொண்டே இருக்கவும் ஐப்பசி பௌர்ணமி அன்று இதை செய்வது மிகவும் நன்மை பயப்பதாகும்.