

உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் அன்னம் அளிப்பது இறைவன்தான். அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. நமக்கு அன்னமளிக்கும் அந்த இறைவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடும் நன்னாள்தான் ஐப்பசி மாத பௌர்ணமி தினம். அன்னத்தையே பிரம்மமாக பாவித்து உணவை இறைவனாகவே பார்ப்பது நமது இந்து தர்மம்.
இந்த ஐப்பசி பௌர்ணமியின் மற்றொரு விசேஷம் அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகிறான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும். ஐப்பசி மாத பௌர்ணமியன்று கோயில்களில் சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாத்தப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவலிங்கத்தை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதம் உண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு குறைவிருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எல்லா சிவாலயங்கள் மற்றும் சிவனுக்கு சன்னிதி இருக்கும் எல்லா சிறிய ஆலயங்கள் உட்பட அனைத்து ஆலயங்களிலும் கண்டிப்பாக ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று இந்த அபிஷேகம் மாலை நேரத்தில் நடபெறும். நாம் பெரிய கோயில் என்றும் சொல்லும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலிலும், கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயிலிலும் இந்த அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுவதால், இதைக் காண இந்தியா முழுவதுமிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐப்பசி பௌர்ணமியன்று நிச்சயம் வருவது வழக்கம்.
நாம் தினமும் உண்ண உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அரிசியிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர். நெல் அரிசியாகிறது. அரிசி சோறாகிறது. சோறு நம் தேகத்திற்குள் சென்று நமக்குள்ளேயே கலந்து நமக்கு வலிமையை அளிக்கிறது. அதேபோலதான் ஆத்மா எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம்.
சிவன் அபிஷேகப் பிரியர் என்பது நமக்குத் தெரியும். அதனால் அவருக்கு தூய்மையான நீர், பசும்பால், இளநீர், கரும்புச் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகிய பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. தாயின் அன்பை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. அம்மையப்பராக இருந்து இந்த உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
சிவபெருமான், பார்வதி தேவி ஆகிய இருவரின் அருளையும் ஒருசேர பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்து பெருமானையும் அம்பிகையையும் பூஜித்து பிரார்த்தனை செய்தால் நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
நாளை (5.11.2025) ஐப்பசி பௌர்ணமி. இந்த அன்னாபிஷேகத்தைப் தரிசித்தால் நமக்கு உண்ண உணவு என்றென்றும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்பதால் மட்டுமல்ல, அன்னம் சம்பந்தப்பட்ட தோஷம் ஏதாவது இருந்தால் கூட நம்மை விட்டு நீங்கி விடும் என்பதால் பக்தர்கள் அனைவரும் அருகிலுள்ள ஏதாவது சிவன் கோயிலுக்குச் சென்று இந்த அபிஷேகத்தை கண் குளிர தரிசித்து இறைவனின் அருளைப் பெற வேண்டும்.