
காலாஷ்டமி நாளில் சிவபெருமானின் உக்கிர வடிவமான காலபைரவரை மனம் குளிர வழிபட்டால், நீண்ட ஆயுள் கிடைக்கும், நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், வாழ்வில் வெற்றி கிடைக்கும். காலபைரவரை வழிபடுவதற்கு காலாஷ்டமி மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. காலபைரவரை வழிபடுவது தீய சக்திகளை அழிக்கும் என்பது நம்பிக்கை. காலபைரவர் காக்கும் கடவுளாகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் பாதுகாப்பும், காலபைரவரின் அருளால் வாழ்வில் வெற்றியும் கிடைக்கும்.
பஞ்சாங்கப்படி காலாஷ்டமி ஜனவரி 21 அன்று மதியம் 12:39 மணிக்கு தொடங்கி ஜனவரி 22 அன்று மாலை 3:18 மணிக்கு நிறைவு பெறுகிறது. காலாஷ்டமி நாள், காலபைரவரின் அருள் பெற விசேஷ நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பூஜை செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறுவதுடன், வாழ்க்கையில் எந்த சிரமமும் ஏற்படாது, அனைத்து தொல்லைகளும் நீங்கும். காலாஷ்டமி அன்று நல்ல எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
வழிபாட்டு முறை:
வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருவதற்காக காலாஷ்டமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு காலபைரவர் உள்ள கோயிலுக்கு சென்று வழிபடலாம். அன்று முழுவதும் அசைவம் மற்றும் பூண்டு வெங்காயம் சேர்க்காத உணவுகளை மட்டும் உண்ண வேண்டும். அன்று விரதம் இருந்தால் காலபைரவர் வேண்டும் வரத்தினை தருவார். காலபைரவரின் வாகனம் நாய் என்பதால், நாய்களுக்கு அன்று உணவளிப்பது காலபைரவரின் மனதை குளிர்வித்து நாம் அருள் பெற உதவும். அன்று குறிப்பாக கருப்பு எள் மற்றும் உளுந்து ஆகியவற்றை தானம் செய்யலாம். காலாஷ்டமி அன்று முறையான பூஜை வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உதவும்.
காலபைரவருக்கு கருப்பு எள்ளில் செய்த மிட்டாயோ, எள்ளு சாதமோ செய்து பிரசாதமாக கொடுக்கலாம். கருப்பு எள் எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவுகிறது. கருப்பு எள் வைத்து படையலிடுவதன் மூலம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஏற்படும். கால சர்ப்ப தோஷம் நீங்கும், கால சர்ப்ப தோஷத்தால் உங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். காலபைரவருக்கு கருப்பு எள்ளை படையலிட்டால், உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகளை தகர்க்கும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால், காலாஷ்டமி அன்று காலபைரவருக்கு கருப்பு உளுந்தில் செய்த உணவு வகைகளை படையல் வையுங்கள். இது உங்கள் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குகிறது மேலும் உங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய உதவுகிறது. இது உங்கள் வீட்டில் உள்ள தீய சக்தியை போக்கி அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர உதவுகிறது.