இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றுவதில் இத்தனை நன்மைகளா?

Siva Vazhipadu
Siva Vazhipadu
Published on

லுப்பை மரம் தெய்வீகத் தன்மை நிறைந்த மரமாக சித்தர்களால் கூறப்படுகிறது. இலுப்பை எண்ணெய் கொண்டு வீடுகளில் தீபம் ஏற்றுவதால் நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் ஈர்க்கப்படும். இதனால் வீடுகளில் உள்ள எதிர்மறை சக்திகள் வெளியேறி மங்கலங்கள் பெருகச் செய்யும்.

இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றுவது சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத் தருவதாகும். இலுப்பை எண்ணெயில் தொடர்ந்து விளக்கேற்றி வர அஷ்ட லட்சுமிகளின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். விளக்கில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்ற குபேர அருளும், திருமணம் கைகூடுவதும், குழந்தை பேறு போன்ற பாக்கியங்களும் கிடைக்கும். அதேபோல், இலுப்பை எண்ணெயில் சிவப்பு திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட வறுமை, கடன் நீங்கும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் விடியற்காலை (4:30 மணி முதல் 6:00 மணி வரை) மண் அகலில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி திரி போட்டு பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைத்து குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்ற குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

சிவனுக்கு உகந்த எண்ணெய்களில் முதன்மையாகக் கருதப்படுவது இலுப்பை எண்ணெய்தான். இந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்ற சகல ஐஸ்வர்யங்களும், மோட்சமும் கிட்டும். இலுப்பை எண்ணெய் சற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். லேசான கசப்பு சுவை கொண்டது. இந்த எண்ணெய் குளிர்காலத்தில் உறைந்துவிடும். இதனை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், சிறிது கசப்பு சுவையுடன் இருக்கும்.

கோயில்களில் விளக்கேற்ற இந்த எண்ணையைத்தான் முற்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு. அதனால்தான் சிவன் கோயில்கள் உள்ள இடங்களில் இலுப்பை மரங்களை நட்டு வளர்த்தனர். பல கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக உள்ளது. திருஇரும்பை மாகாளம், திருச்செங்கோடு,  திருப்பழமண்ணிப்படிக்கரை, திருவனந்தபுரம் போன்ற கோயில்களில் தல விருட்சமாக இலுப்பை மரம் உள்ளது. பொதுவாக பழம்பெரும் சிவன் கோயில்களில் எல்லாம் தல விருச்சமாக இலுப்பை மரம்தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
கர்ணன் கற்றது வில் வித்தையல்ல; வேத வித்தை!
Siva Vazhipadu

தஞ்சாவூரில் உள்ள கீழச்சூரிய மூலை  என்னும் சூரிய பகவான் வழிபட்ட சூரிய கோடீஸ்வரர் கோயிலில் ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழைமையான இலுப்பை மரம் உள்ளது. யக்ஞவல்கியர் பூஜித்த இம்மரத்தை நாம் வலம் வந்து வணங்க மன அமைதியும், புத்தி கூர்மையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்தக் கோயிலில் பிரதோஷத்தின்பொழுது இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்ற சூரிய தோஷம் நீங்கும், கண் பார்வை கோளாறுகள் சரியாகும் என்று கூறப்படுகிறது. பொதுவாக, பல கோயில் கருவறையில் உள்ள இறைவன் மீது ஆண்டிற்கு சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இதனை ‘சூரிய பூஜை’ என்பர். ஆனால், இக்கோயிலில் மட்டும் தினமும் சூரியனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது ஈசன் மேல் பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது.

மங்கலங்கள் பெருக்கும், பலவிதமான தோஷங்களை நீக்கும், வறுமை, கடன் பிரச்னையை தீர்க்கும் இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது மிகவும் நல்லது. ஆயிரம் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவதன் பலனை ஒரே ஒரு இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடும்போது பெற்றுவிடலாம். இலுப்பை எண்ணெய்க்கு அந்த அளவிற்கு தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. இலுப்பை எண்ணெய் மருந்தாகவும் பயன்படுகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த இலுப்பை எண்ணெயில் தீபமேற்றி வாழ்வில் வளம் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com