மகாபாரதத்தில் நம் மனதைக் கவர்ந்த வெகுசில கதாபாத்திரங்களில் கர்ணனும் ஒருவன். கர்ணன் சிறந்த கொடையாளி மற்றும் வில்வித்தை வீரன் என்பதை நாம் அறிவோம். கர்ணனுடைய பிறப்பை வைத்து அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர அனைவரும் மறுத்து விடுகின்றனர். கர்ணன் துரோணாச்சாரியாரிடம் தனக்கு வில்வித்தை கற்றுத்தர சொல்லிக் கேட்கிறான். ஆனால், அதற்கு துரோணாச்சாரியார் அவனுடைய பிறப்பை காரணம் காட்டி மறுத்து விடுகிறார்.
ஒரு நாள் அதிகாலை நேரத்தில் கர்ணன் கிருபாச்சாரியாரிடம் செல்கிறான். கிருபாச்சாரியார் கர்ணனின் திறமையை சோதிக்க நினைக்கிறார். அப்போது வானில் ஒரு பறவை பறந்து செல்கிறது. கிருபாச்சாரியார் கர்ணனிடம், ‘கர்ணா! அந்தப் பறவையைக் குறிப்பார்த்து கீழே வீழ்த்து' என்று கூறுகிறார். உடனே கர்ணனும் வில்லையும், அம்பையும் கையிலே எடுத்து அந்தப் பறவையை குறிப்பார்க்கிறான்.
ஆனால், அடுத்த நிமிடமே வில்லையும், அம்பையும் கீழே வைத்து விடுகிறான். இதைப் பார்த்த கிருபாச்சாரியார், ‘கர்ணா! ஏன் அந்தப் பறவையை வீழ்த்தாமல் வில்லையும், அம்பையும் கீழே வைத்தாய்’ என்று கேட்கிறார். அதற்கு கர்ணன், ‘குருவே! இந்த நேரத்தில் ஒரு பறவை பறந்து செல்கிறது என்றால் தனது குஞ்சுகளுக்கு உணவு எடுத்துச் செல்கிறது என்று அர்த்தம். இப்போது அந்தப் பறவையை நான் வீழ்த்தினால், நான் வீரனாகிவிடுவேன். ஆனால், அந்த குஞ்சுகள் அனாதையாகிவிடும்’ என்று கூறுகிறான்.
இதைக் கேட்ட கிருபாச்சாரியார், ‘கர்ணா! நீ கற்றது வில்வித்தை அல்ல வேதம்’ என்று சொல்கிறார். பணத்தாலும், பதவியாலும் உயர்ந்தவர்கள் தனது பலத்தை பலம் குறைந்தவர்களிடம் காட்டுவது வீரமும் அல்ல, சத்ரிய தர்மமும் அல்ல. கர்ணன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளான் என்பதில் ஐயமில்லை.
ஒருசமயம் கர்ணன், பரசுராமரிடம் தன்னுடைய குலத்தை மறைத்து கல்வி கற்றுக்கொண்டிருந்தான். ஒரு நாள் கர்ணனின் மடியில் பரசுராமர் தலை வைத்து படுத்திருக்க, அப்போது ஒரு தேனி கர்ணனை கடிக்கிறது. குருவின் தூக்கம் கலையக்கூடாது என்பதற்காக கர்ணன் அந்த வலியை பொறுத்துக்கொள்கிறான்.
உறக்கம் கலைந்த பரசுராமர் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு, கர்ணன் சத்திரியன் என்பதை உணர்ந்துக்கொள்கிறார். தன்னை ஏமாற்றி கல்வி கற்றதால், 'நான் சொல்லிக்கொடுத்த வித்தைகள் அனைத்தும் முக்கியமான சமயத்தில் உனக்கு கைக்கொடுக்காது' என்று சாபம் கொடுத்துவிடுவார். அதனால்தான் அர்ஜுனனுடன் போர் புரியும்போது கர்ணனால் பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க முடியாமல் போனது.