
இந்து சாஸ்திரத்தில் பல விஷயங்களுக்கு சகுணம் பார்க்கப்படுவது இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்திற்காக செய்யப்படும் பூஜையின் போது நடக்கும் விஷயங்கள் நல்ல சகுணமா அல்லது கெட்ட சகுணமாக என்பதை பொறுத்து பலன் சொல்லப்படுகிறது.
இந்துக்கள் பண்டிகை, பூஜை, சடங்குகள் போன்ற விசேஷங்களின் போது தேங்காய் உடைக்கும் பழக்கம் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேங்காய் உடைக்கும் போது தேங்காய் எப்படி உடைகிறது என்பதை பொறுத்து நல்லது நடக்குமா கெட்டது நடக்குமா என்றும் தெரிந்து கொள்வார்கள்.
நாம் கோவிலுக்கு செல்லும் போது இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூ, வாழைப்பழம், கற்பூரம், தேங்காய் போன்றவற்றை வாங்கிச்செல்வோம். அப்படி வாங்கும் போது பூ, வாழைப்பழம், கற்பூரம் போன்றவற்றை நல்லதை பார்த்து வாங்க முடியும். ஆனால் தேங்காயை அப்படி பார்த்து வாங்க முடியாது. தேங்காயை மேலோடு பார்த்தால் நல்லதாக தெரியும்.
ஆனால் உடைக்கும் போது தான் அது நல்ல தேங்காயா அழுகிய தேங்காயா என்று பார்க்க முடியும். ஆனால் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், முற்றிய தேங்காயா இல்லை இளம் தேங்காயா என்று கண்டுபிடித்து பார்த்து வாங்குவார்கள்.
கோவிலில் ஏன் குறிப்பாகத் தேங்காய் உடைக்கிறோம் என்றால், தேங்காயில் உள்ள தலைப்பகுதியில் மூன்று கண்கள் இருக்கும். மனிதனின் மும்மலங்களாகிய ஆணவம், கண்மம் மற்றும் மாயை ஆகியவற்றை குறிக்கிறது. இதை கோவிலில் உடைப்பதன் மூலம் என்னுடைய மும்மலங்களையும் உன் முன்னே உடைத்தெறிகிறேன் என்பது தான் தேங்காய் உடைப்பதன் பின்னால் இருக்கும் முக்கிய தாத்பர்யம் ஆகும்
இத்தகைய சிறப்பு மிக்க தேங்காயை இறைவனுக்கு உடைக்கு போது அது அழுகி இருந்தால் அது மிகப்பெரிய அபசகுணம் என்று கருதி மக்கள் வருத்தப்படுவது வழக்கம். அது ஏமாற்றம், கலக்கம், மன குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறார்கள். ஆனால் அதிலும் ஒரு சிலர் தேங்காய் அழுகி இருந்தால், நல்ல அறிகுறியாகவும் ஒரு சிலர் கெட்ட அறிகுறியாகவும் பார்க்கின்றனர்.
தெய்வத்திற்கு உடைக்கப்படும் தேங்காய் அழுகி இருந்தால் அது ஒரு நல்ல நிகழ்வாக, தெய்வீக அருளின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் இதன் மூலம் நம்மை பிடித்த பீடை, கண்திருஷ்டி, தீயசக்திகள் போன்றவை அகன்று போய் விடும் என்று கூறப்படுகிறது.
தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன, அர்த்தம் தெரியுமா? தெய்வத்திற்கு உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் இந்த வீட்டில் ஏதோ சுபகாரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
அதேபோல் தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுணமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பணவரவு, லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த காலத்தில் கோவிலுக்கு செல்லும் போது அர்ச்சனை செய்ய இரண்டு தேங்காய்களை எடுத்து செல்வார்கள். ஒரு தேங்காய் அழுகி இருந்தால் அதனை பூசாரி இறைவனிடம் வைத்து விட்டு மற்றொரு நல்ல தேங்காயை பூஜை செய்ய வந்தவரிடம் கொடுப்பார்கள். இதனால் பூஜை செய்தவர்கள் எந்த மனகஷ்டமும் இல்லாமல் செல்வார்கள்.
ஆகவே, தேங்காய் அழுகி இருந்தால், அதை ஒரு கெட்ட அறிகுறியாகவோ அல்லது நல்ல அறிகுறியாகவோ உடனடியாகக் கருத முடியாது. உங்கள் ஆன்மீக நம்பிக்கையைப் பொறுத்து, நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்களோ, அது போல நீங்கள் அதை எடுத்துக் கொள்ளலாம்.