தெற்காசிய கண்டத்தில் உள்ள அனைவருமே இலங்காதிபதி இராவணனை பற்றி நன்கு அறிவர். இராமாயணத்தில் இராமர் புகழ் எந்தளவிற்கு உள்ளதோ, அதே அளவில் இராவணனுக்கும் மதிப்பு உள்ளது. இராவணன் தீயவனாக இருந்தாலும் அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன், இசையில் மிகப்பெரிய கலைஞன், அறிவிற்கும் வலிமைக்கும் பெயர் பெற்றவன். ராமாயணத்தில், மற்ற பெண்களை விட ராவணனின் மனைவி மண்டோதரி பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராவணனின் மனைவி மண்டோதரி பக்தியுள்ள பெண்.
மண்டோதரி அசுர மன்னன் மாயாசுரன் மற்றும் ஹேமாவின் மகள். திருமணத்திற்குப் பிறகும் தங்கள் கன்னித்தன்மை ஒருபோதும் மாறாது என்று வரம் பெற்ற பஞ்ச கன்னியர்களில் இவரும் ஒருவர். மண்டோதரி ராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்துள்ளார். ராவணன் மனைவி மண்டோதரி பலமுறை ராவணனுக்கு அறிவுரை கூறி, சிறை வைக்கப்பட்ட சீதையை திருப்பி அனுப்பி விடுமாறு கூறினாள்.
ராமர் இலங்கைக்கு படையெடுத்து வரும்போது , அவருடன் சமாதானமாக போகுமாறு ராவணனுக்கு அறிவுறுத்தினாள். மண்டோதரி கற்பில் சிறந்தவள், ஹனுமான் முதன்முதலில் இலங்கைக்கு சென்றபோது, முதலில் மண்டோதரியை கண்டு 'இவர்தான் சீதையோ' என்று எண்ணினார். அதன் பிறகு தான் ராமரின் மனைவியான சீதை நிச்சயம் இவ்வளவு வசதி மிகுந்த அரண்மனையில் தங்க மாட்டாள் என்ற முடிவுக்கு வந்தார்.
ராவணன் மற்றும் மண்டோதரி நல்ல தம்பதிகளாக இருந்தனர். இவர்கள் முதலில் சந்தித்தது ஒரு கோயிலில் தான். இராவணனும் மண்டோதரியும் சந்தித்த கோயிலில் சிவபெருமானை வழிபடும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. மண்டோதரி சிவபெருமானின் தீவிர பக்தையாக இருந்தாள். தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று மீரட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோவிலில் சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளார்.
இந்த கோயிலில் தான் ராவணனும் மண்டோதரியும் முதல் முறையாக சந்தித்தனர். இந்தக் கோயிலில், மண்டோதரி கடுமையாக தவமிருந்தார். மண்டோதரியின் தவத்தை கண்டு மெச்சிய சிவ பெருமான் அவளுக்கு வரம் தருவதாக உறுதியளித்தார். அப்போது மண்டோதரி சிவபெருமானிடம் தனது கணவர் சகல சாஸ்திரங்களில் தேர்ந்தவராகவும், உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டாள். அந்த வரத்தின் விளைவால் மண்டோதரிக்கு ராவணன் கணவனாக அமைந்தான். மண்டோதரியும் இராவணனும் முதன்முதலாக இந்த கோவிலில் சந்தித்துக் கொண்டனர் என்று புராண கதைகள் கூறுகின்றன.
இந்த கோயில் பிற்காலத்தில் மராத்தியர்களால் புதுப்பிக்கப்பட்டது. எனவே கோயிலின் விமானமும் நுழைவாயிலும் மராட்டிய பாணியில் கட்டப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்த இடத்தில் ஏராளமான வில்வ (பில்வ) மரங்கள் காணப்பட்டதால் இக்கோவில் ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோயில் சிவன் மற்றும் மாதா கௌரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. இங்குள்ள சிவபெருமானை முழு பக்தியுடன் வணங்கி, 40 நாட்கள் தீபம் ஏற்றி வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஆவணி மாதத்தில், ஜலாபிஷேகத்திற்காக இங்கு ஏராளமான பக்தர்கள் கூடி இறைவனை வழிபடுகிறார்கள்.