
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனுக்கு பிரிவு என்பது பிரியா விடைதான். மாணவப் பருவத்தில் ஒரு பள்ளியைவிட்டு அடுத்த பள்ளிக்குச் செல்லும்பொழுது பிரிவு வரும். பின்னர் கல்லூரியை விட்டு பிரியும்பொழுது அழுகை வரும். பெண்களாய் இருந்தால் திருமணம் ஆகி புகுந்த வீடு செல்லும்பொழுது கேட்கவே வேண்டாம்.
அது ஆறாத் துயர்போல் அழுகைவரும். பின்னர் குழந்தைகள் ஆகி குழந்தைகள் நம்மைவிட்டு பிரியும்பொழுது வரும் அழுகைக்கு அர்த்தமே வேறுவிதமாக மாறிவிடும்.
ஒருமுறை என் தோழியின் மகன் கல்லூரி மேற் படிப்பிற்காக அயல்நாடு செல்ல எத்தனித்தான். அப்பொழுது என் தோழிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவன் புறப்படும் நேரம் வரும் பொழுது தாய் பாசம் அல்லவா தன்னை அறியாமல் அழுதுவிட்டாள். அதைக் கவனித்த அவளின் மகன் ஏம்மா அழறீங்க; அழாதீங்கம்மா. "பிரிகிறோம் என்றால் வளர்கிறோம் என்று அர்த்தம். வளர வேண்டுமானால் பிரிய வேண்டியது கட்டாயம்" என்று கூறினான். இதைக்கேட்ட என் தோழி கண்களைத் துடைத்துக்கொண்டு அவனை வழி அனுப்பும் வேலையில் மும்முரமானாள்.
அப்பொழுதெல்லாம் கல்லூரியை விட்டுப் பிரியும்பொழுது எந்த ஊரில் எந்த நாளில் எங்கு காண்போமோ என்ற வரியை முணுமுணுக்காத வாய் இருக்கவே முடியாது. உறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமோ அதுபோல் பிரிவுக்கும் கொடுத்தோம். நீண்ட நாள் தன் ஊருக்கு வந்து கடிதம், தபால்களை கொடுத்துவிட்டு சென்ற போஸ்ட்மேன், மாற்றலாகி வேறு ஊருக்கு செல்லும்பொழுது அந்த ஊரில் உள்ள பலரும் கண்ணீர் சிந்துவதை காண முடியும். அதை போஸ்ட்மேன் வாழ்க்கையில் உறவு என்று இருந்தால் பிரிவு என்று ஒன்று வரும் என்று இயல்பாக எடுத்துக் கொண்டு சென்று விடுவார்.
ஏன் நாமும் கூட ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றலாகி போகும் பொழுது எப்படி எல்லாம் கண்ணீர் சிந்துவோம். அந்தக் கண்ணீர் சொல்லும் கவிதையே ஆயிரம் பெறும். "அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" கண்ணீர் மல்கும்போது நெஞ்சம் அடைத்து சொல்ல வந்த சொற்களை கூட சொல்ல முடியாமல் தவிப்போம் அதுதான் பிரிவுத் துயர் என்பது.
பிரிவையும் அவ்வப்பொழுது சந்தித்தால்தான் உறவும் மேம்படும். பிரிவே இல்லாத ஒரு வாழ்க்கையை யாரும் வாழ்ந்து விட முடியாது. கூட்டுத்தொழில் செய்தவர்கள் கூட பிரிவை சந்தித்திருக்கிறார்கள். அப்படி சந்தித்தவர்களில் பல பேர் முன்னேறி இருக்கிறார்கள் என்பது கண் கூடு. தனித்துவத்தை காண்பிப்பதற்கு பிரிவு ஒரு கருப்பொருள் என்றால் மிகை ஆகாது.
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான். உறவும் வரும் பிரிவும் வரும் இதயம் ஒன்றுதான். அப்படி ஒன்றுபட்ட இதயத்திற்குள் பிரிவுதான் ஏது? நிறைய விஷயங்களை மறக்க வைப்பதும் மன்னிக்க வைப்பதும் பிரிவு செய்யும் வேலைதான். ஆதலால் பிரிவு என்பது வளர்ச்சிக்கான குறியீடு என்று நினைக்க வேண்டும்.
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி. ஆமாம் பிரிந்திருக்கும் பொழுதுதான் ஒருவரின் உண்மையான அன்பை நட்பே சினேகத்தை பரி கருணையை இறக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அப்படி பார்த்தாலும் சில காலம் பிரிந்து சேர்வதும் பின்னர் உறுதி பெற்ற மனப்பான்மையை வளர்ப்பதற்குத்தான். ஆதலால் பிரிவையும் நேசிப்போம்! அதனாலயும் வளர முடியும் என்பதுதான் பிரிவு தரும் பாடம்.
பார்க்கும்போது ரசிக்கும் கண்களை விட பார்க்காதபோது நினைத்து தவிக்கும் மனதில்தான் உண்மையான அன்பும் பாசமும் இருக்கும் உறவில் பிரிவும் அப்படிப்பட்டதுதான்!