இந்திரனுக்கு ஈடான புகழையும் பெருமையையும் பெற்றுத் தரும் சனி பிரதோஷ வழிபாடு!

சனி பிரதோஷம்
சனி பிரதோஷம்
Published on

தோஷம் என்றால் குற்றம் உடையது என்பது பொருள். பிரதோஷம் என்றால் குற்றம் இல்லாதது எனப் பொருள். எனவே, குற்றமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும். வறுமை விலகும். நோய்கள் நீங்கும். சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் மேலோங்கி கர்ம வினைகள் ஒழியும். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உயர்ந்த நேரம் பிரதோஷ நேரம்தான். பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் வளங்கள் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட, நினைத்த காரியம் நிறைவேறும். பிரதோஷ தினத்தில் இறைவனுக்கு நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சிறப்பு.

சனிக்கிழமைகளில் பிரதோஷம் வந்தால் அதை சனி பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இன்று சனி பிரதோஷ நாள். இன்று சிவபெருமானை தரிசித்து வந்தால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும். இன்று நீங்கள் செய்யும் தானமானது இந்திரனுக்கு சமமான புகழையும் செல்வாக்கையும் பெற்றுத் தரும். மேலும், இந்த நாளில் சிவாலயம் சென்று சனி பகவானை வணங்கி வந்தால் சனி பகவானால் ஏற்பட்ட தோஷம் தீரும். சனி பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். நோய்கள் நீங்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வமாலை சாத்தி நெய் விளக்கேற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்வது அளவற்ற பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

சனி பிரதோஷ நாளில் ஐந்து பொருட்களை சிவன் கோயிலில் நடக்கும் பிரதோஷ பூஜைக்கு வாங்கிக் கொடுத்தால் கேட்ட வரங்கள் கிடைக்கும். நினைத்தது நடக்கும். குடும்பம் செல்வ வளம் அதிகரிக்கும். பிரதோஷத்தின்போது நந்திக்கு செய்யப்படும் அபிஷேகத்திற்கு இளநீர், பசும்பால், தயிர் ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம். இந்தப் பொருட்களால் நந்திக்கு அபிஷேகம் செய்யும்போது அவரின் உடல் எப்படி குளிறுமோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துயரங்கள் நீங்கி செழிப்படையும். அதன் பிறகு நந்திக்கும் சிவனுக்கும் நடக்கும் அர்ச்சனைக்கு வில்வம் வாங்கிக் கொடுக்கலாம். அபிஷேகம் அலங்காரங்கள் முடிந்த பிறகு சிவனுக்கு அணிவிக்க தாமரை பூ வாங்கிக் கொடுக்கலாம். பொதுவாக, தாமரை பூ சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்று. சிவனுக்கு தாமரைப் பூ படைத்து வழிபட்டால் வேண்டிய வரங்களை அள்ளி அள்ளி கொடுப்பார். அதுவும் சனி பிரதோஷத்தன்று சிவனுக்கு தாமரை படைத்து வழிபட்டால் நீங்கள் வேண்டிய வரங்கள் கிடைக்கும். இந்த ஐந்து பொருட்களையும் வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் வாங்கி கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
முதியவர்கள் நலனுக்காக ஆய்வுகள் கூறும் அறிவுரைகள்!
சனி பிரதோஷம்

ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகத்தின் தசா புக்தி நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை வழிபடுவது அனைத்து கிரக தோஷங்களையும் போக்கும். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவமும் வாய்ந்தது. ஏழரை சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம  சனி மற்றும்  சனி திசை புத்தி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கட்டாயம் சனி பிரதோஷத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்ய வேண்டியது அவசியம்.

இன்று சனி பிரதோஷம் என்பதால், சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானையும் நந்தியம்பெருமானையும் வணங்கி அவரின் பேரருளை பெறுவோம். சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் செல்லாமல் நந்தியின் பின்னால் நின்று சிவனின் அபிஷேகங்களையும் நந்தியின் அபிஷேகங்களையும் தீபாராதனைகளையும் தரிசிப்பது சிறப்பாகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு  நடுவில் சிவபெருமானை தரிசிப்பது பிரதோஷத்தின் மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.

பிரதோஷ சிவமூர்த்தம் நந்தி மேல் அமர்ந்து ரிஷபாரூடராய் கோயில் பிராகாரத்தை வலம் வரும் பொழுது நாமும் கூடவே சேர்ந்து வலம் வருவது மகா புண்ணியத்தை பெற்றுத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com