

சூரிய மண்டலத்தில் உறையும் சூரிய பகவான், சூரிய நாராயணராக வழிபடப்படுகிறார். சூரிய வழிபாட்டை மையமாகக் கொண்டது சவுர சமயம். ஸ்ரீராமபிரானுக்கு அகத்தியர் ஆதித்ய ஹிருதயம் எனும் ஸ்லோகத்தை சூரியனை போற்றும் விதத்தில் உபதேசித்தார். சூரியனை பிரதானமாகக் கொண்ட சில கோயில்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தஷிணார்கா கோயில்: பீகார் மாவட்டத்தில் கயாவில் உள்ள இந்தக் கோயில் மிகவும் பழைமையானது. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பாதங்கள் அமைந்துள்ள விஷ்ணு பாத கோயிலுக்கு முன்புறம் உள்ள தஷிணமாஸ் தீர்த்தத்தில் பக்தர்கள் முன்னோருக்கு திதி கொடுக்கின்றனர். கயாவில் தற்போதும் சூரியனின் பழைமையான சிலைகள், ஓவியங்கள் போன்றவற்றைக் காணலாம். இங்குள்ள சூரிய பகவான் மார்பில் கவசம் விளங்க, இடுப்பில் ஒட்டியாணத்துடன் நீளமான காலணிகள் அணிந்து அழகாகக் காட்சியளிக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பிரம்மன்ய தேவ் கோயில்: மத்திய பிரதேசம் ஜான்சிக்கு அருகில் உள்ளது உனாவ். இங்கே புகழ் பெற்ற பிரம்மன்ய தேவ் கோயில் என்ற பரம்ஜீ கோயில் உள்ளது. சூரிய பகவானுக்கான இந்தக் கோயிலில் சூரியனின் சிலாரூபம் அழகாக திகழ்கிறது. தற்போது அதற்கு கவசம் சாத்தியுள்ளார்கள். இங்கு ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷம். பார்வைக் குறைபாடு மற்றும் தொழுநோய் உள்ளிட்ட சரும நோய்கள் உள்ளோர் இங்கே பிரார்த்தித்து பலன் பெறுகிறார்கள். இந்தப் பகுதியை ஆண்ட பேஷ்வாக்களின் இஷ்ட தெய்வம் இந்த சூரிய பகவான்.
மோதேரா சூரியன் கோயில்: கி.பி. 1026ல் கட்டப்பட்டது. கோனார்க் கோயிலைப் போன்றே கட்டப்பட்டுள்ளது. இங்கு சூரியன் தனது அயனாம்ச பாதையை மாற்றும் இரண்டு நாட்களிலும் (அதாவது உத்தராயணம், தட்சிணாயணமான தை மற்றும் ஆடி மாத முதல் நாளில்) இந்த சூரியனார் விக்கிரகத்தின் மீது, கதிரவன் கிரணங்கள் விழுகின்றன. மிகப்பெரிய ஆலயம். கோபுரம் உண்டு. ஆனால், உச்சிக் கலசம் இல்லை. மண்டபத் தூண்களில் சூரியனின் வெவ்வேறு வித சிற்பங்கள் அழகுற காட்சியளிக்கின்றன.
இங்குதான் மோத்ரா நாட்டிய விழா சிறப்பாக நடைபெறுகிறது. இது வருடந்தோறும் ஜனவரி மாதம் நடைபெறும். இந்த பாரம்பரிய நாட்டிய விழா, மோதேரா சூரியக் கோயிலின் புகழை உலகுக்கு பறைசாற்றுகிறது. குஜராத், அகமதாபாத் நகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்குச் செல்ல பேருந்து வசதி உண்டு.
சூரியனார் கோயில்: நம் தமிழ்நாட்டில் சூரியனார் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தனித் தனி சன்னிதிகளில் நவகிரக நாயகர்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். திருமணத் தடை, காரிய அனுகூலத்திற்கு இத்தலத்திற்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.