வரப்போகுது ஐயப்ப பக்தர்களுக்கான காப்பீடு திட்டம்!

Ayyappa Devotees
Ayyappa Devotees

சபரி மலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நலனைக் காக்கும் நோக்கத்தில் புதிய காப்பீடு திட்டம் ஒன்று வர இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும், கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயனைக் காண சபரி மலைக்குச் செல்வர். சில பக்தர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப வெவ்வேறு காலகட்டங்களில் மாலை அணிந்து மலைக்குச் செல்வது வழக்கம். இருப்பினும் கார்த்திகை மாதத்திற்குப் பிறகு தான் சபரிமலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். சபரி மலையில் தை முதல் தேதி மகர ஜோதி தரிசனம் காண்பது மிகவும் சிறப்பான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு ஏற்ற வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அவ்வப்போது செய்து வருகிறது. இந்நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு வெகு விரைவிலேயே காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவராக இருக்கும் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சபரி மலையில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கான நலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, காப்பீடு திட்டம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

ஐயனைக் காண வரும் பக்தர்களுக்கு சபரி மலை சுற்று வட்டாரப் பகுதிகளில் விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக ஆன்லைனில் தரிசனத்திற்காக விண்ணப்பிக்கும் பக்தர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 10 காப்பீடு கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தத் திட்டம் தொடர்பாக காப்பீடு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து ஒப்பந்தம் போடப்பட இருக்கிறது. ஒப்பந்தம் முடிந்த பிறகு காப்பீடு திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
அறிவோம் ஆன்மீக தகவல்கள்!
Ayyappa Devotees

கார்த்திகை மாதம் முதல் தை வரையிலான சீசன் காலத்தில் ஒரு நாளைக்கு 80,000 பக்தர்களும், மற்ற நேரங்களில் ஒரு நாளைக்கு 50,000 பக்தர்களும் ஐயனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், வரவிருக்கும் காப்பீடு திட்டம் ஐயப்ப பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு, விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்கு கேரளா மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக சபரிமலை சீசனான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தின் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இப்படியான சமயங்களில் பக்தர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு உதவிடத் தான் தேவஸ்தானம் காப்பீடு திட்டத்தைக் கொண்டு வரப்போகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com