ஐப்பசி பௌர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த நிகழ்வின்போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.
அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு: பிரம்ம தேவரும் சிவபெருமானை போன்றே ஐந்து தலைகளைக் கொண்டவர். அதனால் அவர் தனது மனதில் தாம் சிவபெருமானுக்கு நிகரானவர் என கர்வம் கொண்டார். இதையறிந்த சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை தனது கைகளால் கொய்தார். பிரம்மாவின் துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையை பற்றிக் கொண்டதோடு, ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையைப் பற்றிக் கொண்ட கபாலம் பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும்போதுதான் சிவபெருமானின் கையை விட்டு அந்த கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம்.
சிவபெருமான் காசிக்குச் சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தினார். அப்போது அவருக்கு அன்னை அன்னபூரணி அன்னமிட்டார். அன்னபூரணியின் அன்பால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. பிரம்மனின் கபாலமும் கீழே விழுந்ததோடு சிவபெருமானை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாதம் பௌர்ணமி ஆகும். எனவே அன்றைய தினம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக ஐதீகம்.
அன்னாபிஷேகம் செய்யும் முறை: இந்த வருடம் மகா அன்னாபிஷேகம் நாளை 15ம் தேதி வெள்ளிக்கிழமையன்று அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பொதுவாக, சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகமும் அன்னத்தால் அலங்காரமும் செய்வது வழக்கம். அதேசமயம் அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறிகள் பல வகைகளை கொண்டும் அலங்காரம் செய்யலாம். சிவலிங்கத் திருமேனியில் மேலிருந்து அன்னத்தை வைத்துக்கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ் பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணு பாகம், மேற்பகுதி சிவ பாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியில் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாக செய்யப்படுகிறது.
முதலில் ஐந்து வகைப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவலிங்கம் என்கிறது சிவபுராணம். இந்த அன்னப் பருக்கையில் ஒன்றை மட்டும் உட்கொண்டாலே தீராத நோயும் தீரும், ஆரோக்கியம் கூடும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் பிரசாதத்தின் ஒரு பகுதி கோயில் குளத்தில் போடப்படுகிறது. இதன் மூலம் நீரில் வாழும் புழு, பூச்சிகள் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்திற்கும் உணவு கிடைக்கிறது. சாஸ்திரப்படி வெறும் அன்னத்தை சாப்பிடக்கூடாது என்பதால் அந்த சாதத்துடன் தயிர் அல்லது சாம்பார் சேர்த்து பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படும்.
பலன்கள்: அன்னாபிஷேகம் பிரசாதத்தை உண்டால் தீராத நோயும் தீரும். தொழில் வியாபார பிரச்னைகள் தீரும். வாழ்க்கையில் உணவு பஞ்சமே இருக்காது. நிதிநிலை எப்போதும் சீராகவே இருக்கும். மங்காத தோற்றப் பொலிவு கிடைக்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தின்போது உங்களால் முடிந்த அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் என எதை வேண்டுமானாலும் கோயிலுக்கு தானமாக வழங்கலாம்.
அன்னாபிஷேகத்தைக் கண்டவர் வாழ்வில் இன்பமும் நிம்மதியும் உண்டாகும். அதனால்தான், 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்ற சொல் வழக்கு உண்டானது. அன்னாபிஷேகத்தைக் கண்டாலோ, அன்று ஆலயத்துக்கு அரிசி தானம் அளித்தாலோ அவர்கள் ஈரேழு தலைமுறைகளும் பசியின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் கிட்டும். உணவால் உண்டான நோய்கள் தீரும். தேகம் வலிமை பெற்று ஆரோக்கியம் வளரும்.